டெல்லி ரொம்ப மோசம்.. அதிகரிக்கும் மாசு.. நவம்பர் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு லீவு!
டெல்லி: தலைநகர் டெல்லியில காற்று மாசு மோசமடைந்திருப்பதால், நவம்பர் 10ம் தேதி வரை டெல்லி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாநில அரசு. டீசலில் இயங்கும் வெளி மாநில பேருந்துகள் டெல்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக மழைக்காலம், குளிர்காலத்தில் இந்த காற்று மாசு மிகப் பெரிய வாழ்வா சாவா பிரச்சினையில் கொண்டு போய் விட்டு விடும்.
இந்த முறையும் காற்று மாசு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வெளியில் நடமாடவே முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாகியுள்ளது. இந்த நிலையில் மாசு அதிகரித்து வருவதையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டமாக தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை மூடத் தேவையில்லை.. ஆனால் தேவைப்பட்டால் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் பள்ளிகளுக்கு, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாகவே டெல்லியில் சுற்றுச்சூழல் மோசமடைந்து வருகிறது. இதனால்தான் தற்போது பள்ளிகளை மூடும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. காற்று மோசமாக இருப்பதால் மக்களுக்கு குறிப்பாக ஆஸ்துமா உள்ளோர், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாசப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் இருப்பதாக டாக்டர்களும் எச்சரித்துள்ளனர். கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் காற்றில் கலந்திருக்கும் நுன்னிய துகள்கள் மூச்சுக் காற்றின் வழியாக நமது நுரையீரலுக்குள் போய் தங்கி பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.