ராட்சத தடுப்புகள்.. ரோட்டின் நடுவே கன்டெய்னர்கள்.. விவசாயிகளைத் தடுக்க டெல்லி போஸீஸ் தீவிரம்!
டெல்லி: டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை எடுத்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் விவசாயிகளுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தை அடுத்து டெல்லி எல்லை முழுவதும் காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இதுபோல் விவசாயிகள் போராட்டத்தின்போது, டெல்லி நகருக்குள் விவசாயிகள் ஊடுருவினர். அப்போது டிராக்டருடன் நகருக்குள் புகுந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பெரும் வன்முறையும் ஏற்பட்டது. இந்த நிலை தற்போது ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக டெல்லி காவல்துறை டெல்லி நகர எல்லைகள் முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி டெல்லி நகர எல்லைச்சாலைகளில் விவசாயிகள் வாகனங்களில் ஊடுருவி விடாமல் தடுப்பதற்காக பல்வேறு ராட்சத சிமெண்ட் தடுப்புகளை காவல்துறை போட்டு வருகிறது. அதே போல பெரிய பெரிய கண்டைனர்களையும் சாலைகளில் நிறுத்தி வைத்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளின் வாகனங்கள் உள்ளே வராமல் தடுக்கப்படும் என காவல்துறை நம்புகிறது.
டெல்லியை போலவே ஹரியானா மாநில எல்லைகளிலும் இதே போல ஹரியானா மாநில பாஜக அரசு சிமெண்ட் தடுப்புகளை போட்டு வருகிறது. மேலும் ஹரியானாவில் பெட்ரோல் டீசல் போடுவதற்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருவர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவதற்கு அளவு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வடக்கு டெல்லியில் பல பகுதிகளில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அந்த பகுதி மக்கள் இந்த ஒத்திகை காரணமாக தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். கண் எரிச்சல், மூக்கு நமைச்சல் உள்ளிட்டவை ஏற்படுவதாக பல்வேறு மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் நாளை முதல் கிட்டத்தட்ட 20,000 விவசாயிகள் போராட்டத்தில் குவிய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2000 டிராக்டர்களுக்கு மேல் டெல்லியை நோக்கி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் டெல்லி காவல்துறை எடுத்து வருகிறது. விவசாயிகள் டிராக்டரில் மட்டுமல்ல வராமல் கார்கள், டூவீலர்கள், மெட்ரோ ரயில்கள், பஸ் நிலையங்கள் போன்றவற்றின் மூலமாகவும் வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் அங்கும் கூட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்குள் புகுந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த வாகனத்தில் வராமல் நடந்தும் கூட விவசாயிகள் ஊடுறுவலாம் என்ற அச்சம் இருப்பதால் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் இல்லங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் இல்லம், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தப்படலாம் என்பதால் அதை சமாளிக்கும் வகையிலும் பெண் காவலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.