"டிரஸ் கோட் பற்றி எனக்கு கவலை இல்லை".. டெல்லி மெட்ரோ அரைகுறை ஆடைப் பெண் பளிச்!
டெல்லி: டிரஸ் கோட் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நான் டெல்லி மெட்ரோவில் பயணித்தபோது அணிந்த அடை குறித்து வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார், சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் மிகவும் வெளிப்படையான ஆடை அணிந்து வந்து சலசலப்பை ஏற்படுத்திய பெண்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதில் ஒரு பெண் பிரா மற்றும் மினி ஸ்கர்ட் மட்டும் அணிந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். அவர் எழுந்து நின்றபோது அவரது உடலின் முக்கால்வாசிப் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் இருந்தது.
இந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரது ஆடை குறித்து கண்டனம் தெரிவித்திருந்தனர். கேலி கிண்டல்களுக்கும் பஞ்சம் இல்லை. இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பயணிகள் சமூக விழிப்புணர்வுடன், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான உடையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து அந்தப் பெண் இந்தியா டுடேவுக்கு ஒரு பேட்டிஅளித்துள்ளார்.அதில், இதை பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக நான் செய்யவில்லை. இப்படித்தான் நான் பல மாதங்களாக பயணிக்கிறேன். இதைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நான் கவலையே படவில்லை.
நான் என்ன அணிய வேண்டும் என்பது எனது சுதந்திரம். அதை நான் அனுபவிக்கிறேன். பிரபலமாக வேண்டும் என்றோ, விளம்பரம் கிடைக்குமே என்றோ இதை நான் செய்யவில்லை. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை என்றார் அவர்.
மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து அப்பெண் கூறுகையில், டெல்லி மெட்ரோ நிலையம் ரயில்களுக்குள் வீடியோ எடுப்பது குறித்து எந்தவிதமான வழிகாட்டுதலை வைத்துள்ளது.. எப்படி என்னை வீடியோ எடுக்கலாம்.. என் மீதான உடை குறித்து அவர்கள் கவலைப்பட்டால்.. என்னை வீடியோ எடுத்தவர்கள் குறித்தும் அவர்கள் கவலைப்பட வேண்டும் என்றார் அப்பெண்.