இரட்டை இலை யாருக்கு?.. முட்டிக் கொள்ளும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. இன்றே தீர்ப்பளிக்கிறது டெல்லி ஹைகோர்ட்!

Manjula Devi
Mar 16, 2024,10:57 AM IST

சென்னை: இரட்டை இலை தொடர்பான வழக்கில் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா புகழேந்தி மனு கொடுத்துள்ளார். இந்த மனு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளது.


அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க  உத்தரவிடக்கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 




இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, விசாரணையின்போது, அதிமுகவில் இரு அணிகள் உள்ளதா.. இரண்டு அணிகளும் ஒரு சின்னத்திற்கு உரிமை கோருகிறதா.. என கேள்வி எழுப்பினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான +வழக்கறிஞர் பாலாஜி  வாதிடுகையில், அதிமுக ஒரே அணியாக தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் . அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்  எடப்பாடி பழனிச்சாமியை தான் பொதுச்செயலாளராக நியமித்து உள்ளனர். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே உள்ளது என்று வாதிட்டார்.


இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி சச்சின் தத்தா பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக அமையுமா அல்லது ஈபிஎஸ் க்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இரு பிரிவினரும் காத்திருக்கின்றனர். இதில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே இரட்டை இலை சின்னம் யாருக்குப் போகும் அல்லது முடக்கப்படுமா என்பது தெரிய வரும்.


இதற்கிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓ.பி.எஸ். அதிமுக கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், திங்கட்கிழமை  இறுதித் தீர்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.