"விவாகரத்து தேவை".. உமர் அப்துல்லாவின் கோரிக்கையை.. நிராகரித்தது டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்ட மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து தேவை என்று கோரி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
உமர் அப்துல்லாவின் மனைவி பெயர் பாயல் அப்துல்லா. இருவருக்கும் கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள்தான் பாயல். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் பாயலும், உமர் அப்துல்லாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் இருவரும் இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்த நிலையில் பாயலிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி உமர் அப்துல்லா கடந்த 2016ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். ஆனால் அதை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் உமர் அப்துல்லா. அதில், தனது மனைவியால் தான் பல கொடுமைகளையும், சித்திரவதைகளையும், மன உளைச்சலையும் அனுபவித்ததாகவும், எனவே தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உமர் அப்துல்லாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் தங்களது உத்தரவின்போது குறிப்பிடுகையில், குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.
தனது மனைவியால் கொடுமைகளை அனுபவித்ததாக உமர் அப்துல்லா கூறியுள்ளது நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை. உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ கொடுமைகளை அனுபவித்ததாக கூறும் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அவரது மனுவில் எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.