அந்தப் பக்கம் ED சம்மன்.. இந்தப் பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் பிளான் என்ன?

Su.tha Arivalagan
Feb 17, 2024,08:59 AM IST

டெல்லி: அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மன் தொடர்பாக  இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். மறுபக்கம், இன்று டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.


அமலாக்கத்துறை சார்பில் கெஜ்ரிவாலுக்கு  ஏற்கனவே  5 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் எந்த சம்மனையும் ஏற்கவில்லை, விசாரணைக்கும் வரவில்லை. இந்த நிலையில் 6வது சம்மனை அனுப்பிய அமலாக்கத்துறை அப்படியே கோர்ட்டுக்கும் போய் ஒரு மனு செய்தது. 


அதில், தொடர்ந்து சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு வரவில்லை, ஒத்துழைப்பு தரவில்லை. அவர் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சட்டத்தை மதிக்கும் பொறுப்பும், கடமையும் உண்டு, சம்மனை ஏற்க மறுப்பது ஏன் என்பது குறித்து பிப்ரவரி 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


கோர்ட்டில் ஆஜராக கெஜ்ரிவால் திட்டம்




இதை ஏற்று கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி, தான் ஏன் சம்மனை ஏற்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் திடீரென சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கோரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் கெஜ்ரிவால். இன்று இந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது டெல்லி சட்டசபையில் விவாதமும், இறுதியில் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், தலைக்கு ரூ. 25 கோடி வரை விலை பேசி  வருவதாகவும், இதன் காரணமாகவே நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


7 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய பாஜக -கெஜ்ரிவால்




இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என்னிடம் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர். பாஜகைச் சேர்ந்த சிலர் தங்களை அணுகியதாகவும், உங்களது முதல்வர் விரைவில் கைது செய்யப்படுவார். எனவே பாஜகவுக்கு வந்து விடுங்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும், 21 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவ தயாராக உள்ளனர். மேலும் பலரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது என்று பாஜக தரப்பில் பேசியோர் தெரிவித்துள்ளனர்.


எனது எம்எல்ஏக்கள் அந்த அழைப்பை நிராகரித்து விட்டனர். நாங்கள் உடனடியாக எங்களது கட்சி எம்எல்ஏக்களுடன் பேசியபோது, பாஜக தரப்பில் தொடர்பு கொண்டோர் கூறியது பொய் என்று தெரிய வந்து. 7 பேரை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.  மீண்டும் ஆபரேஷன் லோட்டஸை டெல்லியில் அரங்கேற்ற பாஜக முயல்வது தெளிவாகியுள்ளது.


அவர்களுக்கு ஆதரவாக ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பதை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். அனைத்து எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக, உறுதியாக உள்ளனர். அதற்காகவே இந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்று கூறினார் கெஜ்ரிவால்.


ஆம் ஆத்மிக்கு 62.. பாஜகவுக்கு 8




கெஜ்ரிவால் அரசு பதவியேற்ற பின்னர் அரசு கொண்டு வரும் 2வது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆகும் இது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில், ஆம் ஆத்மி கட்சிக்கு 62 பேர் உள்ளனர். மீதமுள்ள 8 பேரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.


பாஜகவுக்கும், அமலாக்கத்துறைக்கும் பதிலடியாக கெஜ்ரிவால் எடுத்து வரும் மூவ்கள் எந்த திசையில் இந்த பிரச்சினை நீளும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.