6 மாதங்களுக்குப் பிறகு.. திஹார் சிறையிலிருந்து விடுதலையானார் கெஜ்ரிவால்.. பிரமாண்ட வரவேற்பு!

Manjula Devi
Sep 13, 2024,06:47 PM IST

டெல்லி:   மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் இன்று ஜாமின் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்று மாலை திஹார் சிறையிலிருந்து கெஜ்ரிவால் விடுதலையானார். அவருக்கு சிறைவாசலில் பிரமாண்ட வரவேற்பை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் அளித்தனர்.


கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் லோக்சபா தேர்தலுக்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் கெஜ்ரிவால். அதன் பிறகு மீண்டும் சிறைக்குத் திரும்பினார். அதன் பின்னர் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் அளித்தது.




ஆனால் அதே நாளில் ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ தொடர்ந்த வழக்கை எதிர்த்து கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.


அதன்படி கைது செய்யப்பட்ட சட்டப்படியே நடந்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலைக் கைது செய்த பிறகு அவரை சிபிஐயும் விசாரித்துள்ளது. அப்போது சிபிஐ அவரைக் கைது செய்யவில்லை. மாறாக அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தவுடன் திடீரென சிபிஐக்கு விழிப்பு வந்து அவரைக் கைது செய்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 22 மாதமாக அமைதியாக இருந்து விட்டு திடீரென கைது செய்துள்ளது சிபிஐ.  இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.  இது மனுதாரருக்கு ஜாமின் கிடைக்க விடாமல் செய்யும் முயற்சியாகவே பார்க்கிறோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


6 மாதங்களுக்குப் பிறகு விடுதலை:




கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார் கெஜ்ரிவால். அதன் பின்னர் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஹரியானா சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால் ஆம் ஆத்மி  கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகியுள்ளார் கெஜ்ரிவால்.


திஹார் சிறையிலிருந்து இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட கெஜ்ரிவாலை அவரது ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். டெல்லியில் தற்போது மழை பெய்து வரும் நிலையிலும், மழையையும் பொருட்படுத்தாமல் ஆம் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்