திடீர்னு என்னாச்சு??.. அரசியலுக்கு முழுக்குப் போடுகிறார் பாஜக எம்.பி. கெளதம் கம்பீர்!

Su.tha Arivalagan
Mar 02, 2024,10:31 PM IST

டெல்லி: லோக்சபா தேர்தலில் மீண்டும் டிக்கெட் கிடைக்காது என்று பரவலாக பேச்சு எழுந்து வரும் நிலையில் தன்னை அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்குமாறு கூறி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்  கிழக்கு டெல்லி பாஜக எம்பி கெளதம் கம்பீர்.


அவரது இந்த கடிதம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர பாஜக பிரமுகராக வலம் வருபவர் கெளதம் கம்பீர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், டக்கென்று அரசியலுக்கு தாவியவர் கம்பீர். பாஜகவில் இணைந்த அவர் கடந்த லோக்சபா தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு அவர் வெற்றி பெற்றார்.




இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் அவருக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்காது என்று பேச்சு அடிபடுகிறது. இந்த பின்னணியில் அவர் அரசியலுக்கு முழுக்குப் போடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், தான் மீண்டும் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும், இதனால் அரசியல் பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், வரவிருக்கிற கிரிக்கெட் கமிட்மென்ட்களில் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளிலிருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாஜிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த் என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம்தான் பாஜகவில் சேர்ந்தார் கம்பீர். அதாவது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு. அதன் பின்னர் நடந்த லோக்சபா தேர்தலில் அவர் 6.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.