அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. அறிவித்த அரை நாள் விடுமுறையை.. வாபஸ் பெற்றது டெல்லி எய்ம்ஸ்!

Su.tha Arivalagan
Jan 21, 2024,11:37 AM IST

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி நாளை அரை நாள் விடுப்பை அறிவித்திருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது நாளை வழக்கம் போல மருத்துவமனை இயங்கும் என்று அறிவித்துள்ளது.


அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் நாளை திறக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.


ராமர் கோவில் திறப்பையொட்டி மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணி கட்சிகளின் மாநிலங்களில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் பலவற்றில் மதுக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. மருத்துவமனைகள் மிக மிக முக்கியமான அத்தியாவசியப் பணிகள் சேவைப் பிரிவின் கீழ் வரும் அமைப்புகள். இவற்றுக்கு விடுமுறை விடப்படுவது சரியான செயல் அல்ல என்று அதிருப்தி கிளம்பியது.


இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விடுமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நாளை முக்கிய அறுவைச் சிகிச்சை எதுவும் திட்டமிடப்படவில்லை என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாக ஹைகோர்ட் தெரிவித்து பைசல் செய்து விட்டது.


அதேசமயம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று விடுமுறை தொடர்பாக பிறப்பித்த சுற்றறிக்கையை இன்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. வழக்கம்போல நாளை மருத்துவமனை இயங்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிருப்தி வெடித்ததன் எதிரொலியாக தனது நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. 


முன்னதாக நேற்று வெளியிடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றறிக்கையில், நாளை பிற்பகல் 2.30 மணி வரை, நான் கிரிட்டிகல் பிரிவுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவை மருத்துவமனை திரும்பப் பெற்றுள்ளது.