யூடியூபில் அவதூறு பேட்டி.. சிங்கமுத்து மீது கேஸ் போட்ட வடிவேலு.. 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக காமெடி நடிகர் சிங்கமுத்து மீது, நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் காமெடி என்றாலே தனி சிறப்பு உண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிலும், மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. அதேபோல் ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்து வந்தவர் சிங்கமுத்து. இதன் பிறகு வடிவேலுவை சிங்கமுத்து தொடர்ந்து விமர்சித்து வந்ததால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மனக்கசப்பு நீடித்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிப்பதையே நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல்களில் வடிவேலு பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பிய சிங்கமுத்துவிற்கு தடை விதிக்க வேண்டும். தனது பெயரைக் கெடுத்ததற்காக மான நஷ்ட ஈடாக ரூ. 5 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்னிலையில், இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்