Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!

Su.tha Arivalagan
Oct 29, 2024,06:45 PM IST

சென்னை: தீபாவளி விடுமுறையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதாலும், பர்ச்சேஸில் தீவிரமாகியிருப்பதாலும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நாளை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.


தீபாவளிப் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கடைசி நேர பர்ச்சேஸிங்கில் மக்கள் மும்முரமாக உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். மக்களில் பலர் சொந்த ஊர்களுக்கும் கிளம்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை:


தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மெட்ரோ இரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப்புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்).


• காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:


➢ பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


• காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை:

பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்

 

31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024(வெள்ளிக்கிழமை) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும்:


1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோஇரயில்கள் இயக்கப்படும்.

2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


பட்டாசு கொண்டு செல்லத் தடை:




இதற்கிடையே, மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பயணிகளின் நலன் கருதி இது தடை செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்களே, புதுத் துணி மணிகள், இன்ன பிற பொருட்களுடன் மெட்ரோவில் பயணிக்கலாம். மறந்தும் கூட பட்டாசுகளுடன் மெட்ரோவுக்குள் போய் விடாதீர்கள். பிறகு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். கவனம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்