தீபாவளி பண்டிகை எதிரொலி.. திருப்புவனம் ஆட்டுச் சந்தையில்.. செம விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி!

Manjula Devi
Oct 22, 2024,11:26 AM IST

சிவகங்கை: திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் அமோக விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறிய  கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள மணல்மேடு, பித்தானந்தம், அல்லிநகரம், கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வளர்க்கப்படும்  ஆடு, கோழி, சேவல் உள்ளிட்ட கால்நடைகளை  திருப்புவனம் சந்தைக்கு அதிக அளவில் கொண்டு விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இதனால் இங்குள்ள கால்நடைகள் புகழ் பெற்றவை ஆகும்.




அந்த வரிசையில்  திருப்புவனம் சந்தை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து இன்று வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இது மட்டுமல்லாமல் சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய், போன்ற ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை இன்று அதிகாலை முதலே  களைகட்டியது.


தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை அதிக அளவில் ஒன்று கூடினர். அப்போது இந்த ஆட்டு சந்தையில் ஆடு கோழி சேவல் உள்ளிட்ட கால்நடைகள் சுமார் 2 கோடி ரூபாய்  வரை அமோகமாக விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி முதல் சூடு பிடித்த ஆட்டு வியாபாரம் காலை 7 மணி வரை நடைபெற்று 2000 ஆடுகள் வரை விற்பனை ஆனது. 


சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் கடந்த வாரம் ஏழாயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால்  தற்போது 10 கிலோ வரை எடை கொண்ட ஆடு ரகங்கள் விலை அதிகரித்து 9000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் இன்னும் ஆடுகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌


தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, சேவல், கோழி, விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்