"புகை".. சென்னை மக்களே.. டெல்லி என்னா பாடு படுது பாத்தீங்களா.. சுதாரிங்க.. இல்லாட்டி  கஷ்டம்!

Su.tha Arivalagan
Nov 13, 2023,05:22 PM IST
சென்னை: தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்தும் அதை முற்றிலும் காற்றில் பறக்க விட்டு விட்டனர் மக்கள். குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்து சரமாரியாக வெடித்துத் தள்ளி விட்டனர்.

நாட்டில் காற்று மாசு அதிகரித்து வருவதாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விபரீத இயற்கைப் பேரிடர்களைத் தவிர்க்கும் முன்னோட்ட நடவடிக்கையாகவும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. அதன்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உத்தரவு.

ஆனால் நேற்று இந்த உத்தரவை கிட்டத்தட்ட அத்தனை பேருமே காற்றில் பறக்க விட்டு விட்டனர். குறிப்பாக சென்னையிலும், புறநகர்களிலும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. சனிக்கிழமையே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டனர். காலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் பட்டாசு சத்தம் கேட்க ஆரம்பித்தது. இது ஞாயிற்றுக்கிழமை காலை புதிய வேகம் பிடித்தது.



காலையில் ஒரு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உத்தரவு.. ஆனால் அதிகாலை தொடங்கி பகல் முழுக்க வச்சு செய்து விட்டனர் மக்கள். விடாமல் பட்டாசுகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பட்டாசுகளை வெடித்துத் தள்ளி விட்டார்கள். அரசு உத்தரவு, காவல்துறை உத்தரவு, கோர்ட் உத்தரவு என்று எதைப் பற்றியும் மக்கள் கவலைப்படவில்லை.

இது மாலையில் மேலும் உக்கிரமடைந்தது. மொத்த நகரமும் புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டது. வீட்டுக்குள்ளும் கூட இருக்க முடியவில்லை. புகை நாற்றம் வயதானவர்களையும், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை கொண்டோரையும் திணறடித்து விட்டது. பட்டாசு வெடிப்பால் ஏற்பட்ட புகையானது மொத்த நகரத்தையும் புகை நகரமாக்கி விட்டது. 



கோர்ட், அரசு, காவல்துறை என எதையும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்டது ஒரு பக்கம் இருக்கட்டும்.. இனி வரும் காலங்களில் இந்த புகைதான் நம்மை பாடாய்ப்படுத்தப் போகிறது. நம் கண் முன்பாகவே ஒரு உதாரணம் இருக்கிறது.. அதுதான் டெல்லி.. காற்று மாசால் டெல்லி படும் பாட்டை நாம் தினசரி செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பூமிப் பந்து தொடர்ந்து பாழ்பட்டு வருகிறது. காற்று, நீர், நிலம் என எல்லாமே மாசடைந்து வருகிறது. இது உச்சத்திற்குப் போய் விட்டால்.. பூமியில் உயிர் எதுவும் மிச்சம் இருக்காது.


டெல்லியை உதாரணமாகக் கொண்டு மற்றவர்கள் சுதாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. சென்னை மாநகரம் அதிக அளவில் காற்று மாசு இல்லாத வெகு சில நகரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட நகரத்தை நாம் பெரிய அளவில் மாசு படுத்தாமல் அதை தொடர்ந்து பாதுகாப்பது நமது கடமை. ஒரு நாள்தானே பட்டாசு வெடிக்கிறோம்.. அதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. "ஒரு நாள்" நல்ல காற்று இல்லாமல் நாம் மூச்சுத் திணறி கஷ்டப்படுவோம் இல்லையா.. அன்று இதையெல்லாம் நினைத்துப் பார்த்து வேதனைப்படுவோம்.. அதைத் தவிர்க்கத்தான் இப்போதே சுதாரிக்க வேண்டும் என்ற அன்பு வேண்டுகோள்.

கொண்டாட்டங்களுக்கு மாற்று வழி யோசிப்போம்.. யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு.. "மனம் இருந்தால் மார்க்கபந்து"!