பாகிஸ்தான் பெண்ணுடன் தீவிரவாதி தாவூத் இப்ராகிமுக்கு 2வது கல்யாணம்.. தங்கை மகன் தகவல்!

Su.tha Arivalagan
Jan 18, 2023,12:01 PM IST
மும்பை:  இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தான் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தாவூத்தின் தங்கை ஹஜீனா பார்க்கரின் மகன் அலிஷா பார்க்கர் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார் அலிஷா பார்க்கர். அதில்தான் இந்தத் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாவூத் இப்ராகிம் கராச்சியில் தங்கியிருப்பதாகவும் அலிஷா தகவல் தெரிவித்துள்ளார்.

தாவூத்தின் முதல் மனைவி பெயர் மெய்ஸாபின்.. அவரை விவாகரத்து செய்யாத நிலையில் பாகிஸ்தான் பெண்ணை 2வதாக மணந்துள்ளாராம் தாவூத். அப்பெண் பாகிஸ்தானின் பதான் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

இதுதொடர்பாக அலிஷா பார்க்கர் தாக்கல் செய்துள்ள விவரங்கள்:

தாவூத் இப்ராகிம் கராச்சியில்தான் தங்கியுள்ளார். ஆனால் இதுவரை  தங்கியிருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறி விட்டார். அதாவது அப்துல்லா காஸி பாபா தர்காவுக்கு பின்னால் உள்ள ரஹீம் பகி பகுதியில் அவர் தங்கியுள்ளார். தாவூத்தின் முதல் மனைவி உறவினர்களுடன் வாட்ஸ் ஆப்பில்தான் தகவல் தொடர்பில் உள்ளார். அவரை தாவூத் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. தாவூத் இப்ராகிமுக்கு நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள் உள்ளனர்.

நான் தாவூத்தின் மனைவி மெய்ஸாபின்னை 2022ம் ஆண்டு ஜூலை மாதம் துபாயில் சந்தித்தேன். துபாயில் உள்ள ஜைதூன் ஹமீத் அந்துலேவின் வீட்டில்தான் தங்கினேன்.  விழாக்களுக்கு எனது மனைவியை மெய்ஸாபின் அழைப்பார். வாட்ஸ்ஆப்பில் தொடர்பில் இருப்பார்.

தாவூத் சகோதரர்களில் அவர், அனீஸ் இப்ராகிம், மும்தாஸ் ரஹீம் பக்கி ஆகியோர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். தாவூத் இப்ராகிம் யாருடனும் பேச மாட்டார்.  தாவூத் தம்பதி்கு 3 மகள்கள் உள்ளனர். ஒருவரது பெயர் மரூக். இவரைத்தான் ஜாவேத் மியான்தத்தின் மகன் ஜுனைத்துக்கு கட்டிக் கொடுத்துள்ளனர். அடுத்த பெண் மெஹரீன். 3வது பெண் மஸியா. இவருக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. மகன் பெயர் மோஹின் நவாஸ் என்று அலிஷா பார்க்கர் கூறியுள்ளாராம்.

இதற்கிடையே , நாட்டின் முக்கியத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மீது தாக்குதல் நடத்த தனி படையை தாவூத் இப்ராகிம் உருவாக்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.  பெரும் நகரங்களில் வன்முறையைக் கட்டவிழித்து விடவும் தாவூத் முயற்சிப்பதாகவும் உளவுத்துறை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.  இதுதொடர்பாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.