இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரானார் .. முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்.. உள்துறைக்கு கிளவர்லி!

Su.tha Arivalagan
Nov 13, 2023,05:22 PM IST

லண்டன்: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இங்கிலாந்து அமைச்சரவையில் இன்று அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. லண்டன் காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் அதிரடியாக பிரதமர் ரிஷி சுனாக்கால், டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதேபோல பள்ளிகள் துறை அமைச்சர் கிப்ஸும் ராஜினாமா செய்தார்.




இதைத் தொடர்ந்து தற்போது இரு முக்கிய அமைச்சர்களை அறிவித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது எம்.பியாக இல்லை. இருப்பினும் இங்கிலாந்து மேல்சபை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்து அரசியலில் பிரதமராக இருந்தவர் அமைச்சராக பதவி ஏற்பது இது புதிதல்ல. இதற்கு முன்பு, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அலெக் டக்ளஸ் என்பவர் 1963ம் ஆண்டு முதல் 64 வரை பிரதமராக இருந்தார். பின்னர் 1970ம் ஆண்டு அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு காலம் பதவி வகித்தார். அப்போது பிரதமராக இருந்தவர் டெட் ஹீத். இருப்பினும் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


2010ல் பிரதமர் 




டேவிட் கேமரூன் 2010ம் ஆண்டு பிரதமராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 43தான்.  1812ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற இளம் வயதுக்காரர் என்று அப்போது பெயர் பெற்றார் டேவிட் கேமரூன்.


ஆறு ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்தார் டேவிட் கேமரூன். இவர் பதவி வகித்தபோதுதான் பிரெக்ஸிட் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.


உள்துறை அமைச்சர் கிளவர்லி




இதற்கிடையே, புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவர்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள கிளவர்லிக்குப் பதிலாகத்தான் டேவிட் கேமரூன் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.