ஆகஸ்ட் 5 நெல்லை -6ம் தேதி கோவை.. மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jul 25, 2024,10:14 PM IST

சென்னை : காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.


சமீபத்தில் நெல்லை மற்றும் கோவை மாநகராட்சிகளைச் சேர்ந்த திமுக.,வை சேர்ந்த மேயர்கள் இருவரும் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். உட்கட்சி குழப்பம், கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவை தான் இவர்களின் அடுத்தடுத்த திடீர் ராஜினாமாவிற்கு காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கோவை மேயராக இருந்த கல்பனா தெரிவித்திருந்தார்.


அதே போல் குடும்ப சூழல் காரணமாக தான் தன்னுடைய மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணனும் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளும் கடந்த ஒரு மாதங்களாக காலியாக இருந்து வந்தன. தற்போது அந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.




இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.


மேலும், ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுகத் தேர்தல்கள் நடத்தவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இவ்வாற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி நெல்லை மேயர் தேர்தலும், 6ம் தேதி கோவை மேயர் தேர்தலும் நடைபெறும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.