பந்தை இப்படி புடிச்சு.. இப்படி போடு.. டேல் ஸ்டெய்னுக்கே பவுலிங் சொல்லிக் கொடுத்த பலே அமெரிக்கர்!

Su.tha Arivalagan
Jun 07, 2024,06:54 PM IST

வாஷிங்டன்:  அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளரும், பல சாதனைகளை படைத்த சர்வதேச வீரருமான டேல் ஸ்டெயினுக்கு அமெரிக்க கிரிக்கெட் ஸ்டேடிய பணியாளர் ஒருவர் பந்து வீச கற்றுக் கொடுத்த வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிரிக்கெட் இப்போது மிகப் பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. இந்த வர்த்தகத்தை பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு சென்று இதன் பரிமாணத்தை விரிவுபடுத்த முயன்று வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த நீண்ட காலமாகவே முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இந்த முறை டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரை ஐசிசி நடத்துகிறது.


அமெரிக்காவும் அதற்கு அருகாமையில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகளும் இணைந்து இந்தத் தொடரை நடத்துகின்றன. இந்தப் போட்டித் தொடரில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியை அந்த அணி சூப்பர் ஓவரில் தோற்கடித்து மிரட்டியுள்ளது. 




இந்த நிலையில் ஒரு வீடியோ பரவலாக வலம் வருகிறது. அந்த வீடியோவில் அமெரிக்க ஸ்டேடியத்தின் பணியாளர் ஒருவர், டேல் ஸ்டெயினுக்கு பவுலிங் கற்றுக் கொடுக்கிறார். கேட்கவே வினோதமாக இருக்கிறது அல்லவா.. அதை விட முக்கியமாக, அந்த பணியாளர் சொல்லிக் கொடுப்பதை ஸ்டெயின் கவனமாக கவனித்து அதைப் போலவே செய்தும் காட்டுகிறார்.. !


சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வேகப் பந்து வீச்சாளர்களில் ஸ்டெயினுக்கு தனி இடம் உண்டு. அபாரமான வேகப்பந்து வீச்சாளர். இவர் விளையாடிய காலத்தில் இவரது பந்துக்கு வீழாத விக்கெட்டே கிடையாது. பெரிய பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஸ்டெயின் பந்து வீச்சுக்கு நடுங்குவார்கள்.  பல முன்னணி பேட்ஸ்மேன்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.


அப்படிப்பட்ட ஸ்டெயினுக்கு பந்து வீச்சை ஒருவர் கற்றுக் கொடுக்கிறார் என்றால் ஆச்சரியம் வரும்தானே.. அந்த கலகலப்பான வீடியோவை டேல் ஸ்டெயின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கற்றுக் கொள்கிறேன் என்று அந்த வீடியோ பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார் ஸ்டெயின்.