சிறுவனின் உதட்டில் முத்தம்.. வருத்தம் தெரிவித்தார் தலாய் லாமா!

Baluchamy
Apr 10, 2023,01:00 PM IST
டெல்லி: புத்தமத துறவியான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக தற்போது மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துள்ளார் தலாய் லாமா.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் புத்தமத துறவி தலாய் லாமா. தனது அற்புதமான போதனைகளின் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் நாட்டின் புத்தமதத் தலைவரான தலாய் லாமா ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசலாவில் வசித்து வருகிறார்.
   


உலக புகழ் பெற்ற தலாய் லாமாவின் சமீபத்திய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. தன் காலில் விழுந்த சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தமிடுவதும், பின்னர் தன் நாக்கை நீட்டி சிறுவனை தன் நாக்கால் தொட சொல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

புத்தமத துறவியான தலாய் லாமாவின் அந்த செயல் பார்ப்போரை முக்கம் சுளிக்கவைத்தது. மேலும் தலாய் லாமாவின் அந்த செயலுக்கு பலரும் அதிர்ச்சியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். தலாய்லாமாவின் அந்த வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு "எனக்கு பின் தலாய் லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிகவும் அழகாக இருக்கவேண்டும்" என்று பேசியது சர்ச்சையானது. இப்போது இந்த முத்தம்.

இதற்கிடையே, தனது செயல் குறித்து வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளார் தலாய் லாமா. இதுகுறித்து தலாய் லாமா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தன்னை சந்திக்க வருவோரிடம் இதுபோல வேடிக்கையாக நடந்து கொள்வது தலாய் லாமாவின் வழக்கம். ஆனால் தற்போதைய சம்பவத்திற்காக சிறுவனிடமும், அவரது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் தலாய் லாமா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.