ரோம் நகரம் எரிந்த சமயத்தில்.. நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல.. ஜெயக்குமார் தாக்கு

Meenakshi
Sep 11, 2023,04:31 PM IST
மதுரை: ரோம் நகரம் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதையாகத்தான் இப்போது சனாதன பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசுகையில், உடனடியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அந்த யோசனையை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது.  



திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியின் சிறப்பை இப்போதுதான் மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவைத் தேர்ந்தெடுக்க மக்கள்தயாராகி விட்டனர், தேர்தலுக்காக காத்துள்ளனர்.

திமுகவுக்கே மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற சந்தேகம் வந்து விட்டது. இதனால்தான் உதயநிதி ஸ்டாலின்,ஆட்சியோ போனாலும் பரவாயில்லை என்று பேசி வருகிறார்.  உண்மையில் பல தொகுதிகளுக்கு திமுக எம்எல்ஏக்கள் செல்லவே முடியாது. அந்த அளவுக்கு மோசமான செயல்பாட்டைக் கொடுத்து வருகிறது திமுக ஆட்சி. எனவே நிச்சயம் அடுத்த தேர்தலில் இந்த ஆட்சி போய் விடும்.

சனாதன பிரச்சினை தேவையற்றது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பார்கள். அதுபோலத்தான் இந்தப் பிரச்சினையும். மக்களை திசை திருப்பவே இந்தப் பிரச்சினையை திமுக கிளப்பியுள்ளது. மத உணர்வுகளை கிண்டல் செய்யக் கூடாது, இழிவுபடுத்தக் கூடாது. உதயநிதி ஸ்டாலின் பேச்சு தவறானதுதான்.

சமத்துவம் குறித்து திமுக பேசவே கூடாது. உண்மையில் அதிமுகவில்தான் சமத்துவம் இருந்தது. திமுக இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியிலேயே சமத்துவம் கிடையாது. அப்படி இருந்தால் ஏ. ராசாவை கூட்டணியின் தலைவராக நியமிக்கலாமே என்று கேட்டார் ஜெயக்குமார்.