தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, தமிழ்நாட்டை நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் எனவும் பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கிடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மெதுவாக நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக நகர்வதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி,தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தமிழ்நாட்டின் கரையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கி கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. வேகம் அதிகரித்த நிலையில் தற்போது நாகைக்கு 400 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மையம் கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்