உஷாரய்யா உஷாரு.. வங்கக் கடலில் உருவாகும் "மிதிலி" புயல்.. நமக்கு  மழைக்கு வாய்ப்பு!

Su.tha Arivalagan
Nov 16, 2023,04:32 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறுகிறது. நாளை இது புயலாக மாறும். இந்த புயலுக்கு மிதிலி என பெயரிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே  இந்தியப் பெருங்கடலில் கடந்த மே மாதம் மோக்கா புயல் மற்றும் அக்டோபர் மாதம் வங்கக் கடலில் ஹாமூன் புயலும் உருவானது.  ஆனால் இந்த இரண்டு புயல்களாலும் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதற்கு மிதிலி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகியுள்ள முதல் புயல் இதுதான்.




மிதிலி புயல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வடதிசை நோக்கி நகர்ந்து வருகிற 18-ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் ,மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீச கூடும். மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.வருகின்ற 22ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இன்று மழை நிலவரம்:


இன்று கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய கூடும்.

தமிழக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய  கன மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரையில் , வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.