"மீண்டும் 2015".. இதுவரை கண்டிராத புயல்.. பலத்த காற்றுடன் விடாமல் வெளுக்கும் கன மழை!

Su.tha Arivalagan
Dec 04, 2023,10:10 AM IST

சென்னை: 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்திற்கு ஈடான பாதிப்பை தற்போது பெய்து வரும் கன மழையும், விடாமல் விரட்டும் புயலும் ஏற்படுத்தி வருகிறது.


வழக்கமாக புயல் வந்தால் நெருங்கி வரும் போது பலத்த காற்று வீசும், கன மழை  பெய்யும்.. பிறகு புயல் கரையைக் கடந்து போய் விடும்.. இதுதான் இதுவரை சென்னையும் சரி தமிழகத்தின் இதர பகுதிகளும் சரி, சந்தித்துள்ள அனுபவம். ஆனால் மிச்சாங் புயல் வித்தியாசமாக இருக்கிறது.


நேற்று இரவு முதல் விடிய விடிய விடாமல் மழை கொட்டித் தீர்த்து விட்டது. இப்போது வரை மழை நின்றபாடில்லை. மாலை வரை மழை அதுவும் மிக கன மழை, பலத்த சூறைக் காற்றுடன் நீடிக்கும் என்று வானிலை மையமும், பிற த னியார்  மழை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.




இந்தப் புயலானது சென்னையைல் கரையைக் கடக்கப் போவதில்லை. மாறாக சென்னைக்கு அருகே நெருங்கி வந்து பின்னர் ஆந்திரப் பகுதியில் நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடையே கரையைக் கடக்கும். இருப்பினும் புயல் மெதுவாக நகர்ந்து வருவதாலும், சென்னைக்கு அருகே அதன் மையப் பகுதி நெருங்கி வந்திருப்பதாலும், அடர்த்தியான மேகக் கூட்டம் சென்னைக்கு மேலே பல மணி நேரமாக பரவிக் கிடப்பதாலும் மழை விடாமல் வெளுத்துக் கட்டுகிறது.


சென்னை மற்றும் புறநகர்களில் பல பகுதிகளில் ஏற்கனவே 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து விட்டது. சில இடங்களில் 200ஐத் தொட்டுள்ளது. இன்று மாலை வரை இதே போல கன மழை விளாசினால், சென்னையில் பல பகுதிகளில் 500 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் சென்னைக்கும் அதன் புறநகர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


கிட்டத்தட்ட 2015ம் ஆண்டு எப்படி ஒரு பெரு வெள்ளத்தையும் பாதிப்பையும் சந்தித்தோமோ அதேபோன்ற நிலைதான் தற்போதும் இருக்கிறது. ஆனால் அப்போது இருந்ததை விட இப்போது பெரிய அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணத்தால் அப்போது ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மழை நிற்கும் வரை சென்னையும், புறநகர்களும் வெள்ளக்காடாகத்தான் இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.