வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி..தனித்தீவு போல் ஆன பள்ளிக்கரணை
Dec 05, 2023,03:30 PM IST
சென்னை: மிச்சாங் புயல், சென்னை முழுவதையும் பதம் பார்த்து சென்றுள்ளது. குறிப்பாக சென்னை வேளச்சேரியில் 20 மணி நேரமாக மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கனமழையால் பள்ளிக்கரணை பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொளியால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது.தற்போது மழை ஓய்ந்ததால் படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. அனேக இடங்களில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ள நிலையில், சென்னை வேளச்சேரியில் இன்னும் தண்ணீர் வடியாததால் இடுப்பளவு தண்ணீரிலும், படகுகளிலும் சென்று வெள்ள நீரால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களை மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.
வேளச்சேரியில் ஏரி நிரம்பியதால் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் மடமடவென ஓடியது .மரத்தையே அடித்துச் செல்லும் அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடானது. எது சாலை என்று தெரியாத அளவிற்கு சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது .ஒரு தெருவை கூட விட்டு வைக்கவில்லை .சாலை தெருக்கள் என முழுவதும் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சாலை ஓரமாக நிற்கவைக்கப்பட்டிருந்த கனரக லாரி பாதி அளவு வெள்ளத்தால் மூழ்கியது .டான்சி நகர், விஜயநகர் பகுதிகளில் குடியிருக்கும் வீடுகள் முழுவதையும் தண்ணீர் ஆக்கிரமித்தது.இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். தற்போது வேளச்சேரி பிரதான சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் நாராயணபுரம் ஏரி உடைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது .நாராயணபுரம் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியது. ஏரி திறந்து விடப்பட்ட போதும் கரையை உடைத்து கொண்டு தண்ணீர் மள மளவென அடித்துச் செல்கிறது. தற்போது இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் ஆக்கிரமித்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தண்ணீர் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் தங்கள் இருக்கும் வீட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள மத்திய அரசின் கடல் வளத்துறையின் தொழில்நுட்ப கழகத்திற்குள் கடல் அலைகள் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேளச்சேரி- தாம்பரம் சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. வேளச்சேரியில் தற்போது வரை 20 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டுள்ளது. தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் நிவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.