அடடா அடடா.. புயல் மழைடா.. ஆனால் புயல் லேட்டா வருதாம் பாஸ்.. சென்னையில் தொடரும்.. மழை!
- மஞ்சுளா தேவி
சென்னை: வங்க கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் நகரின் பல இடங்களில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று இரவுக்கு மேல் மழை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் மழை விட்டு விட்டுப் பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக காலையில், எம். ஆர். சி நகர், பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தவெளி, புறநகர்களில் குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் போன்ற இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 20 செமீ மழையும், நாகை தலைஞாயிறில் 13 செமீ மழையும், பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது நடந்தால்தான் அது புயலாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி மிச்சாங் புயலாக மாறும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தாமதம் காரணமா, டிசம்பர் 2 ஆம் தேதிதான் மிச்சாங் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் கேரளா மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 ஆம் தேதி வரை மிக கனமழையை எதிர்பார்க்கலாம். புயல் உருவாவதால், 14 மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது எனவும் ,மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
சென்னை பல்கலை தேர்வுகள்:
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.