Cyclone Michaung: வங்கக் கடலில் வரப் போகும் புயல்.. அது தெரியுமே.. அதுக்கு பேரு வச்சது யாரு தெரியுமா

Su.tha Arivalagan
Nov 28, 2023,07:00 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால் அதற்கு "மிச்சாங்" (அல்லது மைச்சாங்) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.  நடப்பாண்டில்   மிதிலி புயல் உருவான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில்  தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. பின்னர் டிசம்பர் 1ஆம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில்  புயலாக உருவாக கூடும். இந்த புயல் உருவானால் இதற்கு மிச்சாங் என பெயர் சூட்டப்பட உள்ளது.



இந்த புயலுக்குப் பேர் வச்சது மியான்மர் நாடாகும். ஆங்கிலத்தில் இதற்கு பெயர் மிச்சாங் என்றாலும் கூட பர்மிய மொழியில் இதன் உச்சரிப்பு "மைக்ஜாம் - Migjaum" என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு வங்கக் கடலில் வந்த புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டது. இதை வைத்தது மாலத்தீவு நாடாகும்.  மிச்சாங் புயல் வரப் போவதன் எதிரொலியாக தமிழக மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 2 வரை ஓரிரு இடங்களில் இடி ,மின்னலுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

இன்று மழை நிலவரம்:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ,திருப்பூர், திண்டுக்கல், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை சூரைக்காற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிகபட்சமாக மதுராந்தகம், குலசேகரப்பட்டினம் , மற்றும் கடலூரில் தலா  6 செமீ மழை பதிவாகியுள்ளது.  சோளிங்கரில் 5 செமீ மழையும்,அம்பத்தூர், வானமாதேவி, சோழவரம்,  நாலுமுக்கில் தலா 4செமீ மழையும் பதிவாகியுள்ளது. 

மேலும் பூவிருந்தவல்லி, திருத்தணி, தாமரைப்பாக்கம், செங்குன்றம் ஊத்துக்கோட்டை ,பள்ளிப்பட்டில் தலா 3 செமீ மழையும், திருவாரூர், ஆவடி ,கும்மிடிப்பூண்டி, திருவலங்காட்டில் தலா 2 செமீ மழையும் மற்றும் பொன்னேரியில் 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது.