மெல்ல நகர்ந்து வரும் புயல் சின்னம்.. டிச. 5ம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடையே கரையைக் கடக்கும்

Su.tha Arivalagan
Dec 01, 2023,06:35 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அது தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டனத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை மையத்தின், தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது:


தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வட மேற்கில் நகர்ந்து நாளை 2ம் தேதி தென் மேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேலும் நகர்ந்து வட மேற்கு திசையில் 3ம் தேதி புயலாக வலுப்பெறும். அதன் பின்னர் வட மேற்கில் நகர்ந்து  டிசம்பர் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டனத்திற்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 680 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது நகர்கிறது. அதன் வேகம் சற்று குறைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


புயல் உருவாகவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்று தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்ற நிலையில், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். 




சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 740 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது. நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக அது வலுப்பெறும். டிசம்பர் 3ம் தேதி இது புயலாக மாறும். அதைத் தொடர்ந்து 5ம் தேதி முற்பகல் வாக்கில் இது கரையைக் கடக்கும். 


முதலில் புயலானது, சென்னை- மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது அது சற்று மாறி, நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வலுவிழக்காத நிலையில் கரையைக் கடக்கும் என்பதால் மிக மிக பலத்த காற்றும், மழையும் இருக்கும். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். 


டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழையும் ,டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, விழுப்புரம்,  வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்று எச்சரிக்கை:


மிச்சாங் புயல் காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிமீ இடையே 80 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும்.  டிசம்பர் 4ஆம் தேதி கடலூர் ,மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிமீ இடையே 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலையில் காற்றழுத்தமானது மணிக்கு 13 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த வேகம் அதிகரித்தால் புயல் கரையைக் கடப்பதும் வேகமாக நடக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் 5ம் தேதிதான் அது கரையைக் கடக்கும்.