ஃபெங்கல் புயல் : சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

Manjula Devi
Nov 30, 2024,11:53 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கும்  நிலையில், இன்று காலை முதலே விமானங்கள் தரை இறங்குவதிலும் விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் ஓடுபாதை சரி இருந்தால் மட்டுமே விமானங்களை தரையிறக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. 




இந்த நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வானிலை கடும் மோசமாக நிலவி வருகிறது. அதேசமயம் பலத்த காற்றும் வீசி வருகிறது. இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கி விமானம் இயக்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.


கனமழை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பிறகும் ,வானிலை சீரான பிறகும் தான்  விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்