சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பரவலாக மிக கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வட தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது.
ஃபெங்கல் புயலாக மாறிய பின்னர், நாளை மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புயலாகவே கரையை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லக் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே சென்னைக்கு தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால் சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இந்த மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பட்டினப்பாக்கம், எம் ஆர் சி நகர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் கனமழை விட்டு விட்டு தொடர்வதால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கருமேகங்கள் சூழ்ந்து இருள் நிலவி வருவதால் குளுமையான சூழல் நிலவுகிறது. அத்துடன் மழையும் பெய்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பகலிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
தமிழ்நாடு வெதர்மேன் அட்வைஸ்
இந்த நிலையில் சென்னையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று முதல் மாலை முதல் நாளை மாலை வரை சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமையும் கன மழை தொடரும்.
சென்னையைத் தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும். சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடலோரப் பகுதிகளில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தப் புயலானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும், பாண்டிச்சேரி வரையிலான பகுதிகளுக்கும் மிகப் பெரிய அளவிலான மழையைக் கொடுக்கவுள்ளது. மிக மிக கவனமாக மக்கள் இருக்க வேண்டும்.
இதுக்கு மேல சொன்னா ஹைப்பு, கைப்புன்னு ஒரு கூட்டம் வரும். இந்த நாட்டுல நல்லது சொன்னாலும் யோசிச்சு தான் சொல்லணும் போல. கடந்த பத்து வருடமாக நான் சொல்வதை நம்பி என்னுடன் இருக்கும் அன்பான மக்களுக்காகவே இந்த அட்வைசரி. மற்றவர்கள் தாராளமாக இதை புறக்கணித்து விடலாம். நிச்சயமாக இந்தப் புயலானது சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளுக்கு நிறைய நிறைய மழையைக் கொடுக்கப் போகிறது. எனவே கவனம் அவசியம். நேற்று ஒரு சிறிய மேகம் 60 மில்லி மீட்டர் மழையைக் கொடுத்துள்ளது என்பதை மறந்து விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்