எடு துடைப்பத்தை... சேலையை வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்த கடலூர் மேயர் சுந்தரி!
கடலூர்: அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, திடீரென வகுப்பறைக்குள் புகுந்த கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துடைப்பத்தை கையில் எடுத்து விடுவிடுவென பெருக்கத் தொடங்கியதால் டீச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துடைப்பத்தைக் கொடுங்க மேடம் என்று அவர்கள் கேட்டும் கூட மேயர் கொடுக்கவில்லை. அவரை வகுப்பறை முழுவதும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விட்டுத்தான் துடைப்பத்தைக் கீழே வைத்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக மேயர் சுந்தரி ராஜா இன்று சென்றிருந்தார். அப்போது வகுப்பறையில் ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை மண்ணும் தூசியும் ஆக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து இப்படி தூய்மையற்று இருக்கும் இடத்தில் மாணவர்கள் படித்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என பள்ளி ஆசிரியர்களிடம் விமர்சித்தார். அதே வேளையில் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் இப்படி தூய்மையற்று இருக்கக் கூடாது. உடனே சுத்தம் செய்ய வேண்டும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அடுத்து அவர் செய்ததுதான் அனைவரையும் அதிர வைத்தது. எங்கே துடைப்பம் என்று கேட்ட அவர் பின்னர் துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு விடுவிடுவென வகுப்பறையை பெருக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து ஆசிரியர்களும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு டீச்சர் வேகமாக வந்து கொடுங்க மேடம் நாங்களே பெருக்கறோம் என்று கேட்டபோதும் கூட கொடுக்கவில்லை மேயர். அவர் பாட்டுக்கு கடகடவென பெருக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த மாணவர்கள் டேபிளை நகற்றி மேயர் ஈஸியாக பெருக்குவதற்கு உதவினர்.
தரையைப் பெருக்கிய மேயர் அப்படியே செல்புகளையும் கூட துடைப்பத்தால் பெருக்கி தூசி தட்டி அசத்தினார். அந்த கிளாஸ் ரூம் முழுக்க கூட்டிப் பெருக்கி சுத்தமாக்கி விட்டுத்தான் துடைப்பத்தை கீழே வைத்தார் மேயர் சுந்தரி ராஜா. மேயரின் இந்த செயலால், ஆசிரியர்களும் ஊழியர்களும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுரையாக மட்டுமே வழங்காமல் தானே செயலில் இறங்கி வகுப்பறைகளை பெருக்கி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு முன் உதாரணத்தை மேயர் வழங்கியது அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மாணவர்களுக்கு மேயர் வகுப்பறையை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இப்படித்தான் சமீபத்தில் நடந்த இன்னொரு ஆய்வின்போது வகுப்பறைக்குள் மாணவர்கள் செருப்புகள் இல்லாமல் அமர்ந்திருந்ததைக் கண்டு, ஆசிரியர்களைக் கண்டித்தார். ஆசிரியர்கள் செருப்புடன் பாடம் நடத்தும்போது மாணவர்கள் மட்டும் செருப்பு அணியக் கூடாது என்றால் எப்படி என்று அவர் கண்டித்தார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்