பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சி.டி. ரவி நீக்கம்.. ஆனால் சூப்பர் திட்டத்தில் பாஜக!

Su.tha Arivalagan
Jul 29, 2023,11:37 AM IST
டெல்லி: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு பாஜக மேலிடப் பார்வையாளருமான சி.டி.ரவி  பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை கர்நாடக பாஜக தலைவராக்கி, காங்கிரஸுக்கு டஃப் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.டி.ரவி. இவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் அங்கு போட்டியிட்டார். ஆனால் தோல்வியைத் தழுவினார். கர்நாடகத்தின் மிக முக்கிய ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவர் சி.டி.ரவி. பண பலம், ஆள் பலம் என எல்லாவற்றிலும் யாருக்கும் சற்றும் குறையாதவர்தான். இதனால்தான் பாஜக அவருக்கு வலுவான தேசிய பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்து வைத்திருந்தது.

கூடுதலாக தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பதவியையும் கொடுத்து தமிழ்நாட்டிலும் பாஜகவை வளர்க்க முயற்சித்து வந்தது. சி.டி.ரவிக்கு சாதகமான அண்ணாமலையையும் தமிழ்நாடு பாஜக தலைவராக்கி இருவரையும் இணைத்து செயலாற்ற வைத்தது. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும் என்று அக்கட்சி பெரிதும் எதிர்பார்த்தது. அப்படி வென்றிருந்தால் நிச்சயம் சி.டி.ரவிக்கு மிக முக்கியப் பதவி கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

இந்த நிலையில்தான் தற்போது தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ரவியை விலக்கியுள்ளது பாஜக மேலிடம். அதற்குப் பதில் அவரை கர்நாடக மாநில பாஜக தலைவராக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்ய மிகவும் தீவிரமாக உள்ளது பாஜக.

ஆனால் தமிழ்நாடு பாஜகவுக்கு சுத்தமாக சாதகமாக இல்லை. இருந்தாலும் அங்கும் ஏதாவது கிடைத்தால் லாபமே என்ற திட்டத்துடன்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது பாஜக. கேரளாவில் வாய்ப்பில்லை. தெலங்கானாவிலும் வாய்ப்பில்லை. ஆந்திராவில் ஏதாவது கிடைக்க முயற்சித்து வருகிறது. பாஜக இப்போது மலை போல நம்பியிருப்பது கர்நாடகத்தை மட்டும்தான். இங்கு எப்படியும் அதிக இடங்களைப் பிடித்து விட்டால் நல்லது என்ற நிலையில் உள்ளது பாஜக.

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிட்டங்கியில் பயங்கர விபத்து.. 7 பேர் பலி

கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவின் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் மீறி காங்கிரஸ் ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. சட்டசபைக்குள்ளும், வெளியிலும் பாஜக என்னென்னவோ செய்து பார்த்தும் அதை காங்கிரஸ் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இதன் முக்கியப் பின்னணியாக இருப்பவ���் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்தான்.இவர் ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவர். முதல்வர் பதவிக்கே இவர்தான் வந்திருக்க வேண்டும். அனுபவம் காரணமாக சித்தராமையாவுக்குப் போய் விட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சிவக்குமாரின் முழு உழைப்பு மிக மிக முக்கியக் காரணம். ஆள் பலம், பண பலம் என எல்லாவற்றிலும் டி.கே.சிவக்குமார் கிங்!.. இதனால்தான் பாஜகவால் சமாளிக்க முடியாமல் போய் விட்டது. அக்கட்சியில் இப்படிப்பட்ட ஒக்கலிகா தலைவர் யாரும் இல்லை. எதியூரப்பாவை வெகுவாக நம்பி லிங்காயத்து வாக்குகளை மட்டுமே நம்பி இருந்துத அக்கட்சிக்குப் பாதகமாகி விட்டது. அந்த வாக்குகளும் இந்த முறை கிடைக்காமல் போய் விட்டதால் பாஜக மண்ணைக் கவ்வியது.

நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள்.. அதிகாரத்தின் இதயங்களையும் தொடட்டும்.. ராமதாஸ் உருக்கம்

இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சியை பலப்படுத்தி, சோர்ந்து கிடக்கும் தொண்டர்களை தட்டித் தூக்கி, காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து, அக்கட்சியையும், ஆட்சியையும் நிலை குலைய வைக்க வலுவான தலைவரை மாநிலத்தலைவராக்க முடிவு செய்துள்ளது பாஜக. தற்போது தலைவராக உள்ள கட்டீல் அந்த அளவுக்கு திறமையானவராக இல்லை. எனவே அவரது இடத்தில் சி.டி. ரவியை உட்கார வைக்க பாஜக தலைமை தீர்மானித்துள்ளது.

சி.டி. ரவியை தலைவராக்கினால் ஒக்கலிகா பிரிவு ஓட்டுக்களை பெரிய அளவில் பிரித்தெடுக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. ரவியை வைத்து டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கடி தரவும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஒக்கலிகா வாக்கு வங்கியில் மேலும் ஓட்டையைப் போட்டு அதை பாஜக பக்கம் நகர்த்திக் கொண்டு வரவும் பாஜக  திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கில்தான் ரவியை கர்நாடக மாநில தலைவராக்கி முழுமையாக அவரை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.