2024ல் கலக்கப் போவது.. இந்த 2 கிரிக்கெட் வீரர்கள்தான்.. நாசர் ஹுசேன் சூப்பர் கணிப்பு!

Su.tha Arivalagan
Dec 31, 2023,05:32 PM IST

டெல்லி: 2024ம் ஆண்டு கிரிக்கெட் களத்தை இந்த இரண்டு வீரர்கள்தான் கலக்கப் போகிறார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் நாசர் ஹுசேன் கூறியுள்ளார். அந்த இரண்டு பேருமே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் என்பது நமக்குப் பெருமையானது.


நாசர் ஹூசேன் விரல் நீட்டிக் காட்டியுள்ள வீரர்கள் யார் தெரியுமா.. நம்ம நாட்டு விராட் கோலியும், பக்கத்து வீட்டு பாபர் ஆசமும்தான். இந்தியாவின் விராட் கோலியும், பாகிஸ்தானின் பாபர் ஆசமும், 2024ல் மிகப் பிரமாண்டமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்று நாசர் ஹுசேன் கூறியுள்ளார்.


சும்மா சொல்லக் கூடாது.. இரண்டுமே பேருமே Awesome ஆன வீரர்கள்தான்.. அதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக விராட் கோலிக்கு 2023ம் ஆண்டு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது. அவர் பல சாதனைகளை படைத்த ஆண்டு இது.




விராட் கோலி, பாபர் ஆசம் குறித்து நாசர் ஹூசேன் கூறியுள்ளதாவது:


2023ம் ஆண்டில் விராட் கோலி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது மன உறுதி மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட்டை அவர் கொடுத்துள்ளார். அதேபோல பாபர் ஆசம் வருகிற ஆண்டில் மிகச் சிறப்பாக ஆடப் போகிறார். கேப்டன் பதவியை அவர் உதறியுள்ளது, அவரது கிரிக்கெட்டுக்கு நல்லது. 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.



விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகி வந்த பிறகு தனது பேட்டிங் திறனில் அதிக கவனம் செலுத்துகிறார். அது முன்பை விட பல மடங்கு வலுவாகியுள்ளது. டெக்னிக்கலாகவும் மிகச் சிறப்பாக ஆடுகிறார் கோலி. குறிப்பாக மும்பையில் இலங்கைக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தை மறக்கவே முடியாது. பிரில்லியன்ட் பேட்டிங். விராட் மிகப் பிரமாதமான பார்மில் இருப்பது அவருக்கும், இந்தியாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் நற்செய்தியாகும்.


விராட் கோலியும், பாபர் ஆசமும் நிச்சயம் 2024ம் ஆண்டின் மிகப் பெரிய பங்களிப்பாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்றார் நாசர் ஹுசேன்.


விட்டு விளாசிய விராட் கோலி




விராட் கோலியைப் பொறுத்தவரை 2023 மிகப் பிரமாண்டமான வருடமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி 55.91 என்ற சராசரியுடன் 671 ரன்களைக் குவித்தார். இதில் 2 சதங்கள், 2 அரை சதங்கள் அடக்கம். அவரது பெஸ்ட் 186.


அதேபோல 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 72.47 என்ற சராசரியுடன், 1377 ரன்களைக் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 99.13 ஆகும். ஆறு சதம், எட்டு அரை சதம் இதில் அடகக்கம்.  பெஸ்ட் ஸ்கோர் என்றால்166 ரன்கள் எடுத்ததே.


இந்த ஆண்டு மொத்தமாக 35 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2048 ரன்களை விளாசியுள்ளார் விராட் கோலி. சராசரி 66.06 ஆகும். எட்டு சதம், 10 அரை சதம் இதில் இடம் பெறுகிறது.  இந்த வருடம்தான் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையை முறியடித்து 50 சதங்கள் விளாசி புதிய வரலாற்றை எழுதினார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விஸ்வரூபம் எடுத்திருந்தார்.  11 போட்டிகளில் ஆடிய விராட் கோலி 765 ரன்களைக்  குவித்திருந்தார். இது புதிய உலகக் கோப்பை வரலாறும் கூட.  அவரது தொடர் அதிரடி ஆட்டங்களால் இந்தியா, இறுதிப் போட்டி வரை முன்னேறியது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.