வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நடிக்க வந்த அரசியல்வாதிகள்... லேட்டஸ்ட் வருகை.. முத்தரசன்!

Meena
Oct 25, 2023,03:30 PM IST

- மீனா


சென்னை: நல்ல வேளை தருமியும், நக்கீரரும் இப்போது உயிரோட இல்லை.. இருந்திருந்தால் இப்படித்தான் ஒரு விவாதம் நடந்திருக்கும்...!


"பிரிக்க முடியாதது எதுவோ"


"அரசியும், சினிமாவும்"


அந்த அளவுக்கு நம்ம தமிழ்நாட்டில் இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது.  சினிமாவில் நடித்த பிறகு அரசியலுக்கு வரும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள், இப்போது நடிப்பிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.




லேட்டஸ்டாக இந்த லிஸ்ட்டில் இணைந்திருப்பவர்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். தீவிர அரசியல்வாதியான அவர் தற்போது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் களம் இறங்கி உள்ளார். விவசாயிகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் "அரிசி "என்ற திரைப்படத்தில்தான் முத்தரசன் நடிக்கிறார். 


இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பொழுது சோஷியல் மீடியாவில் வெகுவாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தில் விவசாயியாகவே முத்தரசன் நடிக்கிறார். அவர் வேட்டியை மடித்துக் கொண்டு மண்வெட்டியை பிடித்துக் கொண்டு ஒரு விவசாயி  தோற்றத்தை கண்முன்னே நிறுத்துவது போலவும், நெல் மூட்டையின் மேல் அமர்ந்து பேசுவது போலவும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.




எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், சீமான் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு புது விஷயம் கிடையாது. அதிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களின் சினிமா பயணங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. அப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து அதிலும் பெரும் பதவிகளை வகித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்களின் முக்கியமானவர்கள் இவர்கள். ஆனால் அரசியலில் இருந்து சினிமாவில் வந்து நடிகர்களாக மாறுவது என்பது மிகவும் அரிதான விஷயமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் அரசியல்வாதி முத்தரசனின் இந்த புது அவதாரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல விடுதலை சிறுத்தை கட்சி தலைவரான திருமாவளவன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கூட இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவில் நடித்ததில்லை. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் யாரும் சினிமாவில் நடிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உடைத்து இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.




இது மட்டுமல்ல திரைத்துறையில் நடித்து பல  படங்களையும் இயக்கியவருமான நாம் தமிழர் கட்சியின் தலைவர்  சீமான் இப்போது அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு நடிகர்கள் வருவது என்பது தமிழ்நாட்டிற்கு பழக்கப்பட்ட விஷயம் தான். நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட பல ஆண்டுகளுக்கு முன்பாக நாடகங்கள் நாடகம் மற்றும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவருடைய மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் சினிமா துறையில் இருந்து இப்போது  அரசியலிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாத விஷயமாக மாறி வருகிறது. 




அரசியலில் நடக்கும் விஷயங்களை சினிமாவில் காட்டும் போது அது மக்களுக்கு வெகுவாக சென்றடைகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது . மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்கள் நலப்பணிகள் செய்தாலும்  அரசியல் தலைவர்களின் கலை ஆர்வத்தினால் மற்றும் முக்கிய கருப்பொருளைக் கொண்ட கதாபாத்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திரைப்படத்தில் நடிக்கவும் செய்வது என்பது அரிதினும் அரிதான விஷயம் தான். ஏனென்றால் திரைப்படங்களில் நடித்து அரசியலுக்கு வருவது என்றாலும் பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளாக வேண்டி இருக்கிறது. 




அதை போல் அரசியலில் இருந்து திரைப்படங்களில் நடிப்பது என்றாலோ பல விமர்சனங்களையும் நோக்கி பயணிக்க வேண்டியும் உள்ளது. அந்த வகையில் ஒரு விவசாயியின் வாழ்க்கை முறையை எடுத்துக் கூற அமைந்த "அரிசி" என்ற படத்தில் விவசாயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் காங்கிரஸ் மாநில செயலாளர் முத்தரசன்  நடிக்கும் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று பலரும் இப்போது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.