திமுக கூட்டணியில்.. சிபிம், சிபிஐக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. மற்ற கட்சிகளுக்கு எத்தனை?

Manjula Devi
Feb 29, 2024,07:22 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்து வருகின்றன. தொகுதி பங்கீடு செய்வதில் திமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.




தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக  இறுதி உடன்பாடு மேற்கொண்டுளஅளது.  இன்று திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்தக் கூட்டத்தின்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு சீட் உடன்பாடு ஏற்பட்டு அதுதொடர்பான ஒப்பந்தத்தில் மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் ஆகியோரும், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.


இதுவரை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2, முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என மொத்தம் 6 தொகுதிகளுக்கு உடன்பாடு முடிவடைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கடசிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.


இதுகுறித்து பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை தொகுதி என்பதை காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம். திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்த சிக்கலையும் யாரும் ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்றார்.


மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கோவை மற்றும் மதுரை தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எந்தத் தொகுதியில் போட்டி என்பது ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.