கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட.. மீனவ குடும்பங்களுக்கு.. நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின்

Manjula Devi
Dec 23, 2023,05:44 PM IST
சென்னை: கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு மொத்தம் ரூபாய் 8.68 கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயலால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. மக்கள் வெள்ளநீரில் அனைத்து பொருட்களையும் இழந்து நற்கதியாய் நின்றனர். குறிப்பாக பெரும்பாலான மீனவ மக்கள் பாதிக்கப்பட்டனர் .

மீனவ மக்களின் வாழ்வாதாரம் படகுகளை நம்பி தான் இருக்கும். ஆனால் புயல் மழையால் படகுகள் முழுவதும் நாசமாகின. கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் தங்களின் வீடுகள், படகுகள், வலைகள் என அனைத்தையும் இழந்து தவித்தனர். தற்போது இந்த நிலைமை சீரடைந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் வேலை இழக்கும் நிலைமை ஏற்பட்டது.



சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலந்தது. இந்த கச்சா எண்ணெய் மழை நீருடன் கலந்து ஊருக்குள்ளும் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.  கடலில் எண்ணெய் கசிவால் மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சிபிசிஎல் நிறுவனத்திடம் நிவாரணம் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலில் 500மீ தூரம் வரை கச்சா எண்ணெய் பரவி கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது. கடலில் கச்சா எண்ணெய் கலப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

எணணூர் முகத்துவாரப் பகுதியில் உள்ள காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன் படை குப்பம், தாழாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் சேதமடைந்து உள்ளது. இந்த நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மொத்தம் ரூபாய் 8.68 கோடி அளவு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2301 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12,500 நிவாரண தொகையும், பாதிக்கப்பட்ட 787 படகுகளை சரி செய்திட தலா ரூபாய் 10 ஆயிரம் நிவாரண தொகையும், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6700 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 7500 நிவாரண தொகையும் வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை நேரடியாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.