மிரட்டும் ஆர்எஸ்வி வைரஸ்.. கொரோனாவை விட பெரிய வில்லனாம் இது!

Aadmika
Sep 01, 2023,04:55 PM IST
ஹைதராபாத் : கோவிட் 19 வைரசை விட மோசமான வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.  கொரோனாவை விட இந்த வைரஸ் பாதிப்புதான் அதிகமாக இருக்கிறதாம்.

இது சாதாரண ஜலதோஷம், சளிக்கான காரணிகள் போல வந்து, சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டால் எளிதில் குணப்படுத்தி விடக் கூடியதாக இருந்தாலும் கூட அது அபாயகரமானது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இன்ஃப்ளுயன்சா வைரஸ், H3N2 வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களை போல் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கப்பட்டுள்ளது.



ILI-SARI (influenza like illness severe acute respiratory illness) என சொல்லப்படும் இந்த வைரஸ் 50 சதவீதம் சுவாசப் பிரச்சனைகள் H3N2 வைரஸ் போன்று ஏற்படுத்தக் கூடியதாகும். மே 7 ம் தேதி வரை கணிசமான அளவில் இருந்த கொரோனா பரவல் ஆகஸ்ட் 27 ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. அதே சமயம் கடந்த சில நாட்களாக வைரசால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது சாதாரண சளி அல்லது இன்ஃப்ளுயன்சா வைரஸ் போன்றே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த சளி, ஜலதோஷத்திற்கு காரணமான RSV வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கண்டறியப்படவில்லை. கோவிட் 19 உள்ளிட்ட பல வைரஸ்கள் தற்போது சாதாரணமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள டாக்டர் சுனிதா நரேட்டி, RSV வைரஸ் தான் தற்போது அதிகம் பரவி வருவதாக சொல்கிறார். இந்த வைரஸ் எச்சில் அல்லது தும்மல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக் கூடியது என சொல்லி உள்ளார். மற்ற வயதினரை விட இந்த வைரஸ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகவும், இவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் இருந்து நீர் வழிதல், இருமல், லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

சாதாரண காய்ச்சலுக்கு, சளிக்கு இருப்பது போன்றே அறிகுறிகள் இருப்பதாகவும், இருந்தாலும் வைரசின் பாதிப்பு வேகமாக பரவி வருவதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானர்களுக்கு H1N1, கோவிட் 19, டெங்கு போன்ற நோய்கள் இல்லை என்றே வந்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.