3 நாள் முதல் மனைவிக்கு.. 3 நாள் 2வது மனைவிக்கு.. 7வது நாள் அவர் சாய்ஸ்.. பலே கணவர்!
குவாலியர்: குவாலியரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 2 மனைவி பிரச்சினையை சமாளிக்க வாரத்தை சமமாக பிரித்து ஆளுக்கு 3 நாட்கள் என ஒதுக்கி அனைவரையும் வியர்க்க வைத்து விட்டார்.
குவாலியரைச் சேர்ந்த அந்த நபர் ஒரு என்ஜீனியர். இவருக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி குவாலியரைச் சேர்ந்தவர். 2 வருடங்கள் இணைந்து வாழ்ந்தனர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது இவர் தனது மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டு, தான் வேலை பார்த்து வந்த குருகிராமுக்குப் போய் விட்டார். பின்னர் 2020ம் ஆண்டு குவாலியர் திரும்பி வந்தார்.
அவரது செயல்பாடுகளில் முதல் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குருகிராமுக்குக் கிளம்பிப் போனார். அங்கு போய் விசாரித்தபோது, தனது கணவர், தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து குவாலியர் குடும்ப நீதிமன்றத்தில் தனது கணவரின் 2வது திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது கணவருக்கு பலமுறை கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் தான் 2வதாக திருமணம் செய்த பெண்ணை விட்டு விலக மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
அதேபோல முதல் மனைவி, 2வது மனைவி ஆகியோருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவர்களும் தங்களது கணவரை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் இரு மனைவிகளும் கூடிப் பேசினர். அதில், 2 வீடுகள் பார்த்து இரு மனைவிகளையும் தனித் தனியே குடித்தனம் வைப்பது. வாரத்தில் 3 நாட்கள் ஒரு மனைவியுடன் வசிப்பது. அடுத்த 3 நாட்களுக்கு இன்னொரு மனைவியுடன் வசிப்பது. 7வது நாளை (ஞாயிற்றுக்கிழமை) கணவர் அவர் இஷ்டப்பட்ட வீட்டில் கழிப்பது என்று திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு அந்த நபரின் இரு மனைவிகளும் ஒப்புதலும் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து முதல் மனைவிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். 2வது மனைவிக்கும் குருகிராமில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். தனது சம்பளத்தையும் இரு மனைவியருக்கும் பாதிப் பாதியாகவும் கொடுக்க சம்மதித்துள்ளார்.
இந்த சமரச ஏற்பாட்டை கோர்ட்டிலும் அவர்கள் தெரிவித்து விட்டனர். இதுகுறித்து வழக்கறிஞர் ஹரீஷ் திவான் கூறுகையில், அவர்களுக்குள் நிலவி வந்த பிரச்சினை இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. மூன்று பேரும் முழு மனதுடன் இதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் சட்டப்படி இந்த ஒப்பந்தம் செல்லாது. இந்து திருமண சட்டப்படி ஒரு மனைவியை விவாகரத்து செய்யாமல், இன்னொருவரை திருமணம் செய்ய முடியாது என்பதால் இந்த திருமணமும் செல்லாது, அவர்களுக்குள் செய்யப்பட்ட ஒப்பந்தமும் செல்லாது. ஆனால் தனிப்பட்ட முறையில் 3 பேரும் இணைந்து எடுத்துள்ள முடிவு என்பதால் அதில் யாரும் தலையிடவும் முடியாது என்றார்.
இதுவே ஒரு பெண்.. 2 ஆண்களை மணந்து ஆளுக்கு 3 நாட்கள், 7வது நாள் என் இஷ்டம் என்று அட்டவணை போட்டு குடும்பம் நடத்த முடியுமா.. அப்படி நடத்தினால் சமூகம் சாதாரணமாக கடந்து செல்லுமா?.. Just asking!