பெண்ணை முட்டித் தூக்கிய எருமை மாடு.. கட்டித் தூக்கி வந்து முகாமில் அடைத்த அதிகாரிகள்

Su.tha Arivalagan
Jun 17, 2024,06:00 PM IST

சென்னை: சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஒரு எருமை மாடு முட்டித் தூக்கி கொண்டு சில மீட்டர் தூரம் வரை ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாட்டை தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து அதை முகாமில் அடைத்துள்ளனர்.


சென்னையில் நாய்த் தொல்லையும், மாடுகளின் தொல்லையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சாலையில் செல்வரை நாய்கள் கடிப்பதும், மாடுகள் முட்டித் தள்ளுவதும் தொடர் கதையாகி வருகிறது. நகருக்குள் மாடுகள் வளர்க்க தடை உள்ளது. ஆனாலும் அதையும் மீறி பலர் மாடுகள் வளர்க்கின்றனர். குறிப்பாக புறநகர்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது.


வளர்க்கும் மாடுகளை தெருக்களிலேயே விடுகின்றனர். பகல் நேரத்தில் அவை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அவை திடீரென வெருண்டு ஓடுவதும், முட்டுவதும், போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சாலைகளில் படுத்துக் கிடப்பதும் புறநகர்களில் சர்வ சாதாரணாக பார்க்கலாம்.




இந்த நிலையில்தான் திருவொற்றியூர், சோமசுந்தரம் 2வது தெருவில் ஒரு மாடு, திடீரென சாலையில் சென்ற பெண்ணை முட்டித் தூக்கி விட்டது. கொம்புகளில் சிக்கிக் கொண்ட பெண்ணை சில மீட்டர் தூரம் வரை அது இழுத்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் கூடி வந்து அந்த பெண்ணை மீட்டனர். தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து அந்த மாட்டை பிடித்துக் கொண்டு சென்றனர். 


பின்னர் அந்த மாட்டை பராமரிப்பு மையத்திற்குக் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு அந்த மாநாடு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டை யாரும் இதுவரை உரிமை கோரவில்லையாம். உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை தெருக்களில் திரிந்த 1117 கால்நடைகளை பிடித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.