கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா.. ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Meenakshi
Dec 14, 2023,11:25 AM IST
திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு  ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இந்த முறை அதிக அளவில் இருப்பதால் கொரோனா மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பேயாட்டம் போட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.   அலை அலையாக பரவி அது ஒரு வழியாக வீரியமிழந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. கேரளாவில்தான் இது அதிகமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இந்த கொரோனாவால்  உயிரிழப்பு பெரிதாக இல்லை. அதேசமயம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை கணிசமாக அதிகரித்து உள்ளது. கேரளாவில் சுவாசப்பிரச்சனை என்று மருத்துவமனைக்கு செல்பவர்களை பரிசோதித்தால் தான் கொரோனா இருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது கேரளாவில் சபரி மலை சீசன் வேகம் பிடித்துள்ளது. 

பல மாநிலங்களிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் தற்பொழுது இங்கு குவிந்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் தற்பொழுது அதிகமாக உள்ளது. இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கேரள காவல்துறை திணறுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வரை சாமி தரிசனம் செய்ய , ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் புக் செய்து வருகின்றனர். 

நேற்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இன்றும் 72 ஆயிரம் பேர் வரை புக் செய்துள்ளனர். இதனால் தரிசனத்திற்குக் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 22 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதாலும், கேரளாவில் கொரோனா பரவி வருவதாலும், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.