Corning Gorilla glass: ரூ. 1000 கோடியில் பிரமாண்ட முதலீடு..  ஸ்ரீபெரும்புதூரில்!

Meenakshi
Dec 12, 2023,06:39 PM IST

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங்  இன்க் எனும் நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்கு பாதுகாப்பு கண்ணாடிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. 


பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்பொழுது சென்னையில் இயங்கி வருகிறது. இந்த வரிசையில் இப்போது கார்னிங் இன்க் நிறுவனமும் சென்னையில் தனது பிசினஸைத் தொடங்குகிறது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்தான், கார்னிங் இன்க். 


சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 1000 கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் தனது கொரில்லா கண்ணாடி தயாரிக்கும் ஆலையை நிறுவுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் இந்த தொழிற்சாலை அமையவிருக்கிறது. இந்த தொழிற்சாலை மூலமாக முதற்கட்டமாக 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் முதலில் தெலுங்கானாவில் தான் அமையவிருந்தது. ஆனால் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான சூழல் தமிழகத்தில் பிரமாதமாக இருப்பதால் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க திட்டமிட்டு இங்கு வந்துள்ளனர்.


இந்த நிறுவனம் தயாரிக்கும் கண்ணாடிகள் ஆப்பிள், ஐபோன், ஐபாடுகளுக்கு பாதுகாப்பு அம்சமாக திகழ்கிறது. இந்த கண்ணாடிகள் கீழே போட்டாலும் போனுக்கு எந்த ஆபத்து ஏற்படுத்தாதாம். இந்த நிறுவனம் கண்ணாடி மட்டுமல்லாமல் பீங்கான்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.