குன்னூரில் சுற்றுலா பஸ் விபத்து : பலி 9 ஆக உயர்ந்தது; 40 பேர் படுகாயம்
குன்னூர் : குன்னூரில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 61 பேர் கொண்ட குழு பஸ்சில் சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டுள்ளனர். ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்த போது மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளித்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளது. இது பற்றி தகவல் அறிந்து போலீசாரும், மீட்பு படையினரும் உடனடியாக அங்கு விரைந்தனர். இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி விடிய விடிய நடந்து வந்தது.
விபத்தில் சிக்கி 8 பேர் நேற்று உயிரிழந்த நிலையில் பஸ்சுக்கு அடியில் பாண்டித்தாய் என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குன்னூரில் சுற்றுலா வந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.