Recipe: ஈஸியா பண்ணலாம்.. ரொம்ப டேஸ்ட்டியும் கூடங்க.. மஞ்சள் பூசணி அல்வா செஞ்சு பார்க்கலாமா?
Jan 30, 2024,06:04 PM IST
சென்னை: வணக்கம் தோழிகளே.. அனைவரும் நலமா? ஸ்வீட்னாலே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் மட்டும் இல்லை, பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இன்னைக்கு ஈசி குக்கிங்ல கூட அதைப் பத்திதான் பேசப் போறேன்.
நான் சொல்ல போறது ரொம்ப ரொம்ப ஸ்வீட்டான, செய்வதற்கு மிகவும் எளிதான "மஞ்சள் பூசணிக்காய்" என்று அழைக்கப்படும் பரங்கிக்காயில் செய்யும் அல்வா தான். குழந்தைகள் வீட்டில் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பாங்க. அதுவும் பூசணிக்காய்னா ஐயோ வேண்டாம்னு ஓடியே போய்டுவாங்க. ஆனால் அல்வா பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா..!. வெறுத்து ஒதுக்கப்படும் அந்த பூசணிக்காயில்தான் நாம அல்வா செய்யப் போறோம்.
பூசணிக்காயில், நிறைய சத்துக்கள் இருக்குங்க. இந்த பூசணிக்காயில் என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு தெரிஞ்சா, நீங்களே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வீங்க.
முக்கியமான சில நன்மைகளை மட்டும் சொல்றேன் தோழிகளே,
- மஞ்சள் பூசணி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
- மஞ்சள் பூசணி இலை விட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைய உள்ளதுங்க.
- விட்டமின் பி1 பி2 பி6 டி மற்றும் பீட்டா கரோட்டின் தாமிரம் பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் இரும்பு சுக்ரோஸ் போன்ற கனிமங்கள் உள்ளன.
- பித்தப்பை கற்களுக்கும் சிறுநீரக கற்களுக்கும் எதிராக இது சிறப்பாக செயல்படும்.
- மஞ்சள் பூசணிக்காயில் உள்ள அதிக ஆன்டிஆக்சிடென்ட் ஆரோக்கியமான இதய செயல்பாட்டிற்கு உதவுதுங்க.
ஓகே.. பூசணிக்காயின் சிறப்புகளைப் பார்த்தாச்சு.. அடுத்து இதை எப்படி ஈசியா ஹெல்தியா டேஸ்டியா செய்யலாம்னு பார்க்கலாமா.. வாங்க கிச்சனுக்குள்ள போலாம்.
தேவையான பொருள்கள்:
மஞ்சள் பூசணி- துருவியது ஒரு கப்
சக்கரை- கால் கப்
நெய்- 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை- சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை: ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி துருவிய பூசணிக்காய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பத்து நிமிடங்கள் குறைந்த தீயில் அடுப்பை குறைத்து வைத்து, பூசணிக்காயை நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் அதனுடன் அரை கப் சக்கரை, சேர்த்து நன்கு கிளறவும்.
ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து, வறுத்த முந்திரி திராட்சை சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். அவ்வளவுதாங்க , ஈஸியான அல்வா ரெடி. செய்யுற நேரமும் மிக மிகக் குறைவு.
நீங்க உங்க வீட்ல உள்ளவங்களுக்கு செய்து கொடுத்தா, இது பூசணிக்காயில் செஞ்சதுன்னே தெரியாதுங்க. மனமும் சுவையும் அருமையா இருக்குங்க.
நீங்க என்ன பண்றீங்க,, நாளைக்கே .. இல்லை இல்லை.. இன்னிக்கே பூசணிக்காய் அல்வா ட்ரை பண்றீங்க.. செஞ்சு சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு எங்களுக்கும் மறக்காம சொல்றீங்க. சரியா!