யாருக்கு எவ்வளவு சீட்?.. எங்கெல்லாம் போட்டியிடலாம்.. மின்னல் வேகப் பேச்சுக்கு காங்கிரஸ் ரெடி!
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தங்களில் இந்தியா கூட்டணி வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மின்னல் வேகப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும் அது தயாராக உள்ளதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீட்டை வேகமாக முடித்து விட்டால், பிரசாரத்திற்கு நிறைய அவகாசம் கிடைக்கும் என்றும் பாஜகவினருக்கு எதிரான பிற உத்திகளை வகுக்க போதிய நேரம் கிடைக்கும் என்றும் கருதுகிறது.
இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனராம். குறிப்பாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பல்வேறு தலைவர்களுக்கும் நேரடியாக தொலைபேசி மூலம் பேசி வருகிறாராம்.
ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள 2வது கட்ட பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குவதற்குள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை முடித்து விட காங்கிரஸ் ஆர்வமாக உள்ளதாம். இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இன்னும் இதுவரை கூட்டணிக்குத் தலைவர் நியமிக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்ச பொதுத் திட்டம் தீட்டப்படவில்லை. இதெல்லாம் முடியாமல் இருக்கக் காரணம், கூட்டணிக் கட்சிகளின் பல்வேறு தலைவர்களும் நாங்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.
மேலும் பல்வேறு தலைவர்களுக்குப் பிரதமர் பதவி மீது ஆசையும் உள்ளது. எனவே தங்களையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அபிலாஷையுடனும் அவர்கள் உள்ளனர். இந்தப் பஞ்சாயத்தையெல்லாம் தாண்டித்தான் இந்தியா கூட்டணி தேர்தலை சந்தித்தாக வேண்டும், வென்றாக வேண்டும். இதையெல்லாம் உணர்ந்துதான் காங்கிரஸ் கட்சி பல படி ஏற்கனவே இறங்கி வந்து விட்டது.
பிரதமர் வேட்பாளர், கூட்டணித் தலைவர் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நீக்குப் போக்காக நடந்து கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. நாங்கள் பெரியண்ணன் போக்கில் நடந்து கொள்ள மாட்டோம். யார் வேண்டுமானாலும் தலைவராகலம், யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்று ஏற்கனவே ராகுல் காந்தியும் தெளிவுபடுத்தி விட்டார். நமக்கு தேவை ஒற்றுமை மட்டுமே.. அதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.. அப்போதுதான் பாஜகவை வெல்ல முடியும் என்று தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தியின் மணிப்பூர் டூ மும்பை யாத்திரை தொடங்கவுள்ளது. அந்த யாத்திரை தொடங்குவதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முதலில் தொகுதிகளை முடிவு செய்து விட்டால், அதற்குப் பிறகு அவரவர் வசதிக்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்து கொள்ளாம் என்பது காங்கிரஸின் யோசனை.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கமிட்டி அமைத்து விட்டது காங்கிரஸ். முகுல் வாஸ்னிக் தலைமையிலான அந்தக் கமிட்டியின் உறுப்பினர்களான அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் மல்லிகார்ஜுூன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் இதுதொடர்பாக ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
ஆனால் தொகுதிப் பங்கீடு என்பது காங்கிரஸ் நினைப்பது போல அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை. காரணம், மமதா பானர்ஜி மற்றும் சிவசேனா கட்சிகள் மிகப் பெரிய முரண்பாடு கொண்ட தலைவர்கள். மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி கிடையாது.. அங்கு திரினமூல் காங்கிரஸ்தான் உள்ளது. அந்தக் கட்சியால் மட்டுமே பாஜகவை வெல்ல முடியும் என்று ஏற்கனவே மமதா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். இது ஒரு சிக்கல்.
அதேபோல உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இன்னொரு சிக்கல். அந்தக் கட்சியும் கூட அதிக இடங்களில் தானே போட்டியிட விரும்புகிறது. சிவசேனாதான் மகாராஷ்டிராவில் முக்கியக் கட்சி என்று அது கூறி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தானே போட்டியிடவும் உத்தவ் தாக்கரே கூறி வருகிறது.
மற்றொறு பக்கம் ஆம் ஆத்மி கட்சி குடைச்சல் கொடுத்து வருகிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 21 தொகுதிகளையும் பங்கிட அனுமதிக்க மாட்டோம் என்று அந்தக் கட்சி பிடிவாதமாக பேசி வருகிறது. இரு மாநிலங்களிலும் காங்கிரஸின் முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பது ஆம் ஆத்மி கட்சிதான். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகள் உள்ளன. இதில் நான்கு தொகுதிகளை முன்பு ஆம் ஆத்மி வைத்திருந்தது. அதேபோல டெல்லியில் உள்ள 8 தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே வென்றிருந்தது. ஆனால் கடந்த தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் அது இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சினைகள் உள்ள நிலையில், இதையெல்லாம் சமாளித்து இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டை எப்படி சுமூகமாக முடிக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.