அரசியல் வரலாற்றில் முதல் முறையாக.. ராஜ்யசபா எம்.பி. ஆனார் சோனியா காந்தி.. எல். முருகனும் வெற்றி
ஜெய்ப்பூர்/போபால்: லோக்சபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வென்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி ஆகியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் போட்டியின்றி ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6 ஆண்டு காலம் சோனியா காந்தி எம்.பி.யாக பதவி வகிப்பார். இதுவரை உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகி வந்தார் சோனியா காந்தி. முதல் முறையாக அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு, போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
77 வயதாகும் சோனியா காந்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு அவரது உடல் நிலை இடம் கொடுக்காது என்ற காரணத்தால் அவரை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சோனியா காந்தி ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் எல் முருகன் வெற்றி
மறுபக்கம், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்டார். அவரும் இன்று போட்டியின்றி வெற்றி பெற்றார். 2வது முறையாக அவர் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார்.
முன்னதாக வரும் லோக்சபா தேர்தலில் எல். முருகன், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அங்கு பாஜகவினரும் தீவிரக் களப் பணியாற்றி வந்தனர். ஆனால் பாஜக மேலிடம், எல். முருகனை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்தவே, நீலகிரியில் அவர் போட்டியிடவில்லை என்பது உறுதியானது.
காங்கிரஸுக்கு தோல்வி உறுதி - பாஜக
இதற்கிடையே, வருகிற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவும் என்பதையே சோனியா காந்தியின் ராஜ்யசபா தேர்தல் போட்டி முடிவு காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த தேர்தலிலேயே அமேதி தொகுதியை காங்கிரஸ் இழந்து விட்டது. வரும் தேர்தலில் ரேபரேலியையும் காங்கிரஸ் இழக்கும். இதை உணர்ந்துதான் பாதுகாப்பாக ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டுள்ளார் என்று பாஜக ஐடி விங் செயலாளர் அமித் மாள்வியா கூறியுள்ளார்.