காங்கிரஸில் பெண் தலைவர்கள் நிறைய உருவாக வேண்டும்..  ராகுல் காந்தி விருப்பம்

Su.tha Arivalagan
Dec 01, 2023,05:14 PM IST

கொச்சி: காங்கிரஸ் கட்சியில் பெண் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் பாதி முதல்வர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.


பெண்களிடம் தலைமைப் பொறுப்பு இருக்கும்போது அந்த நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கும். இது பல முறை பல தருணங்களில் பல நிலைகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பெண்களுக்கான இடத்தைக் கொடுக்க பல ஆண் தலைவர்கள் விரும்புவதில்லை, ஆதரிப்பதில்லை, முன்வருவதும் குறைவு.


குறிப்பாக அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவம் என்பது மிக மிக குறைவுதான். பெண்கள் அரசியலில் வளர்ந்து உயர் நிலையை அடைவது என்பது மிகப் பெரிய போராட்டமாகவே இன்று வரை தொடர்கிறது. அகில இந்திய அளவில் பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.




அகில இந்திய அளவில் இதுவரை பாஜகவுக்கு ஒரு பெண் தலைவர் கூட இருந்ததில்லை. அதேபோல சமாஜ்வாடிக் கட்சிக்கு பெண் தலைவர் இருந்ததில்லை. பல கட்சிகளிலும் இதே நிலைதான். காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி என்று இருந்துள்ளனர். திரினமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவியர் மமதா பானர்ஜி என்பதால் அவர் அக்கட்சியின் தலைவராக இருக்கிறார். அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி இருக்கிறார்.


மாநிலக் கட்சிகள் சிலவற்றில் பெண் தலைவர்கள் இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்துள்ளார். மாநில பாஜகவின் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்துள்ளார். அதேசமயம், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக பெண் யாரும் இதுவரை இருந்தது இல்லை.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பெண் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொச்சியில் அவர் பேசுகையில்,  பெண் தலைவர்களை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி முயல வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் பாதி முதல்வர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அதற்கு இலக்கு வைத்து இப்போதிருந்தே செயல்பட வேண்டும்.


முதல்வர் பதவிக்கு உயரும் அளவிலான தகுதியுடன் காங்கிரஸ் கட்சியில் பல பெண்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.


காங்கிரஸ் மட்டுமல்ல.. எல்லாக் கட்சிகளிலுமே நல்ல பெண் தலைவர்கள் உருவாக வேண்டும். இப்போது பெண்களுக்கு அரசியலில் ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். இதுதான் பெண்கள் தலையெடுத்து தலைமைப் பொறுப்பில் அமர சரியான தருணம் என்றும் தாராளமாக குறிப்பிடலாம்.