ஈரோடு கிழக்கு.. தேடித் தேடிப் பார்க்கிறோம்.. எதிரிகளையே காணவில்லை.. கே.எஸ்.அழகிரி கிண்டல்!

Su.tha Arivalagan
Jan 28, 2023,10:06 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்களும் தேடித் தேடிப் பார்க்கிறோம்.. என்ன ஒரு ஆச்சரியம்.. ஒரு எதிரியைக் கூட காணவில்லை என்று நக்கலடித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.



ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் களை கட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மறுபக்கம் எதிர்த்துப் போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை. பாமக இடைத் தேர்தலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடையே கே.எஸ். அழகிரி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை. உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நாங்களும்  தேடித் தேடிப் பார்க்கிறோம். ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை.  ஈரோடு முழுக்க ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன.  எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். இந்தத் தேர்தல் பலருக்கு நல்ல படிப்பினையைக் கொடுக்கும் என்று கூறினார் அழகிரி.