அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறாரா சோனியா காந்தி?

Su.tha Arivalagan
Feb 25, 2023,02:18 PM IST
ராய்ப்பூர்: பாரத் ஜோடோ யாத்திரையோடு எனது அரசியல் முடிந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனிய காந்தி கூறியுள்ளார்.

சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 85வது காங்கிரஸ் மாநாடு நேற்று தொடங்கியது.  2வது நாளான இன்று சோனியா காந்தி பேசினார். அவரது பேச்சு உணர்ச்சிகரமாக இருந்தது. சோனியா காந்தியின் பேச்சிலிருந்து சில:



பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் முடிவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். அதுதான் என்னை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இது மிகப் பெரிய திருப்புமுனை யாத்திரையாகும். அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மையைத்தான் இந்தியா விரும்புகிறது என்பதை பாரத் ஜோடோ யாத்திரை நிரூபித்துள்ளது.


ஈரோடு கிழக்கு.. குடிமகன்களுக்கு பேட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு!


மக்களுக்கும், நமது கட்சிக்கும் இடையிலான நெருக்கத்தையும், தொடர்புகளையும் நாம் மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த யாத்திரை நமக்குப் புரியவைத்துள்ளது. அதைத் தொடங்கியும் வைத்துள்ளது. மக்களுக்காக போரிடுவதற்கும், போராடுவதற்கும் காங்கிரஸ் எப்போதும் தயார் நிலையில் உள்ளது என்பதையும் இந்த யாத்திரை உணர்த்தியுள்ளது.

யாத்திரைக்காக பாடுபட்ட அனைத்து காங்கிரஸாரையும் நான் மனமார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். குறிப்பாக ராகுல் காந்தியை அவரது உறுதிப்பாட்டுக்காகவும், வலிமைக்காகவும் பாராட்டுகிறேன் என்றார் சோனியா காந்தி.

தனது ஓய்வு குறித்து சோனியா காந்தி சூசகமாக பேசியிருப்பது காங்கிரஸார் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ஓய்வு பெற விரும்புவதாக மறைமுகமாக சோனியா குறிப்பிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. அப்படியானால் அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி போட்டியிடாவிட்டால் அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சோனியா காந்தி தொடர்ந்து பேசுகையில், தற்போதைய நாட்டு நடப்பு மிகவம் சவாலானதாக இருக்கிறது. மிகப் பெரிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பிரதமர் மோடி, பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டணி ஒவ்வொரு ஜனநாயக கட்டமைப்பையும் கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது.  எதிர்க்கட்சிகளை இரக்கமில்லாமல் வாயடைக்க வைத்து வருகிறது. பொருளாதாரத்தை சீரழித்து வருகிறது. வர்த்தகர்கள் வாட்டி வதைக்கப்படுகிறார்கள். மக்களிடையே பயத்தையும், துவேஷத்தையும் இது அதிகரித்து வருகிறது.

சிறுபான்மை சமூகத்தவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் கண்டும் காணாமலும் விடப்படுகின்றன. மகாத்மா காந்தியையே இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். அரசியல் சாசன சட்டத்தையே கேலிகூத்தாக்குகிறார்கள்.

நான் அரசியலுக்கு வந்தபோது என்ன நிலையில் நாடு இருந்ததோ அதே நிலையைத்தான் நான் இப்போது பார்க்கிறேன். இந்த நாட்டை பாதுகாப்பாக காக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. காங்கிரஸ் என்பது அரசியல் கட்சி அல்ல.. நாம் மக்களின் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியைக் காக்க  வேண்டிய வாகனம் ஆவோம் என்றார் சோனியா காந்தி.