ரேபரேலியில் பிரியங்கா காந்தி... அமேதியில் ராகுல் காந்தி.. காங்கிரசின் மாஸ்டர் பிளான் ரெடி!

Aadmika
Mar 06, 2024,07:30 PM IST

டில்லி : வரும் லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பான சூழலில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையுடன், தேர்தல் வியூகங்களையும் வகுத்து வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மீண்டும் பாஜக., மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என வியூகம் வகுத்து வருகின்றன. அதே சமயம் எதிர்க்கட்சிகள் பாஜக 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுத்தே தீர வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. 


மோடியை எதிர்க்கும் காங். வேட்பாளர் யார்?




தேசிய அளவில் தாங்கள் பலம் வாய்ந்த கட்சி என்பதை காட்டுவதற்காக பாஜக முதல் ஆளாக 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. அதுவும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட விஐபி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதையும் வெளியிட்டு விட்டது. இதில் பிரதமர் மோடி, மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


சமாஜ்வாதியிடம் இருந்து வாரணாசி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டு வாங்கி உள்ளதால் யாரை நிறுத்த போகிறது காங்கிரஸ் என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை மோடியை எதிர்த்து ராகுல் காந்தியே களமிறங்க போகிறாரா? அப்படி இல்லையென்றால் அவர் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்? இந்த முறையும் பாஜக சார்பில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியே நிறுத்தப்படுகிறார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்து வருகின்றன.


ரேபரேலியில் பிரியங்கா காந்தி?


இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபாவிற்கு சென்று விட்டதால் அவருக்கு பதில் அக்கட்சி சார்பில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி இந்த முறை நிறுத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறையை போல் இந்த முறையும் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்ட தொகுதிகளிலும் ராகுல் காந்தியே போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமேதியில் ஸ்மிருதி இராணி பலமானவராக மாறி விட்டதால், இந்த முறையும் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ரோபரேலி தொகுதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 3 முறை வெற்றி பெற்ற தொகுதி. அதே போல் அமேதி தொகுதியும் காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த தேர்தலில் ராகுல் காந்தி, ஸ்மிருதி இராணியிடம் தோற்றதால் இந்த முறை அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதனால் மீண்டும் அமேதியை காங்கிரசின் கோட்டையாக மாற்ற ராகுல் காந்தியே இந்த முறை களம் இறங்க போகிறாராம். அதே சமயம் கடந்த முறை தனக்கு கை கொடுத்து எம்.பி.,யாக்கிய வயநாடு தொகுதியையும் கை விடாமல் இந்த முறையும் அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட போகிறாராம். 


பிரியங்கா காந்தி சந்திக்கும் முதல் தேர்தலே பலமானதாக இருக்க வேண்டும் எனபதால் அவருக்கு ரேபரேலி தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் ரேபரேலி தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக பிரியங்காவை வேட்பாளராக அறிவித்த பிறகு, தங்கள் கட்சி சார்பில் பலமான வேட்பாளரை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.