ஜெட் வேகத்தில் காங்கிரஸ்.. மின்னல் வேகத்தில் தொகுதிப் பங்கீடு.. இதை யாருமே எதிர்பார்க்கலையே!

Su.tha Arivalagan
Feb 24, 2024,10:26 AM IST

டெல்லி:  காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு ஜெட் வேகம் பிடித்துள்ளது. உத்தரப்  பிரதேசம், டெல்லியைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது.


தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மியுடன் காங்கிரஸுடன் படு வேகமாக டீலிங்கை முடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். அட இதை எதிர்பார்க்கலையே என்று பலரும் வியக்கும் அளவுக்கு வேகம் காட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.




தற்போதைய நிலவரப்படி உ.பி, டெல்லி, குஜராத், கோவா, ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளதாம். 


உ.பியில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது சில நாட்களுக்கு முன்பு முடிவானது. மீதம் உள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடிக் கட்சி மற்றும் கூட்டணிக்க ட்சிகள் போட்டியிடும்.


டெல்லியைப் பொறுத்தவரை கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் புது டெல்லியில் ஆம் ஆத்மி போட்டியிடும். வட மேற்கு, வட கிழக்கு மற்றும் சாந்தினி செளக்  தொகுதிகளில் காங்கிரஸ் நிற்கும்.


சண்டிகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்.  பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி கிடையாது. அங்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது கோவா, குஜராத், ஹரியானாவிலும் சீட் பங்கீடு முடிவடைந்துள்ளது. குஜராத்தில் 2, ஹரியானாவில் ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என தெரிகிறது. அதேபோல 2 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில், தெற்கு கோவாவில் காங்கிரஸ் போட்டியிடும்.  வடக்கு கோவாவில் ஆம் ஆத்மி போட்டியிடும்.


அடுத்து மகாராஷ்டிராவிலும்,  டீல் முடியப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.  அங்கு சில தொகுதிகள் குறித்து மட்டுமே சிக்கல் நீடிக்கிறது. அது சரியாகி விட்டால் அங்கும் கூட்டணி இறுதியாகி விடும் என்று கூறப்படுகிறது.  இந்தியா கூட்டணியில் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொகுதிப் பங்கீடு  முடிந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பாஜக வட்டாரத்தை சற்று பரபரப்பாக்கியுள்ளன.