வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி.. 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது காங்.!

Su.tha Arivalagan
Mar 08, 2024,10:40 PM IST

பெங்களூரு: லோக்சபா தேர்தலில்,  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல கர்நாடகத்தின் ஷிமோகா தொகுதியிலிருந்து கீதா சிவராஜ் குமார் போட்டியிடவுள்ளார். 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.


லோக்சபா தேர்தலில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. 195 தொகுதிகளுக்கு அது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தி நகரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியானது.  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சற்று முன்பு வெளியிட்டார்.


39 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு




சட்டிஸ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா மாநில வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 39 தொகுதிகளின் பெயர்களும், அதன் வேட்பாளர்களும் அதில் இடம் பெற்றுள்ளனர். 


இந்தப் பட்டியலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சட்டிஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கோவன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.




கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ், பெங்களூர் ஊரக தொகுதியில் போட்டியிடவுள்ளார்.  முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக இந்தப் பட்டியலில் உள்ளது. சசிதரூர் திருவனந்தபுரத்தில் வேட்பாளராக மீண்டும் களம் இறங்குகிறார்.


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாநிலங்கள் முதல் பட்டியலில் இடம் பெறவில்லை. அங்கு வேட்பாளர்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்ததும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதேபோல ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதீதமாக இருக்கிறது.


யார் யார்?




சட்டிஸ்கர் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், கர்நாடகத்தில் 7 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன.  அதில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.  


இதுதவிர லட்சத்தீவு, மேகலாயாவில் 2 தொகுதிகள், நாகாலாந்து, சிக்கிம் தலா ஒரு தொகுதி, தெலங்கானாவில் 4 தொகுதிகள் மற்றும் திரிபுரா மாநிலத்தில் திரிபுரா மேற்கு தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.