தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Meenakshi
Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.


தமிழக சட்டசபையில் இன்று  அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,  அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையையும் காவல்துறையின் நடவடிக்கையும் மக்கள் 

பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 




தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் நம்முடைய முதல்வர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.


இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுத்து காவல் துறையினர் ஞானசேகரனை கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், குற்றவாளி யாருடன் செல்போனில் பேசினார் என்பதை அவர் பேசிய எண்ணை வைத்து மத்திய அரசு கண்டுபிடித்து வெளியிடாதது ஏன்? 


மிஸ்டு கால், டயல்டு கால், ரிசிவ்டு கால் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மத்திய அரசின் சர்வரில் இருக்கிறது. அவர்கள் ஏன் இதை வெளியிடவில்லை? எதற்காக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை விட எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் பேசும் அரசியல் மிக மிக கொடுமையாக இருக்கிறது. 


இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்று அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்று சொல்ல முடியுமா என்பது தான் எங்களுடைய கேள்வி. ஆனால், இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை என்றார் செல்வப்பெருந்தகை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்